கன்னடத்தில் ரீமேக்காகும் தனுஷ் படம்

தனுஷ் நடிப்பில் தயாரிப்பில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது.
முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. வரிவிலக்குக்காக இந்தப் படம் ‘ப.பாண்டி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இதில் ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்திருந்தனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷும், ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
தமிழில் ஹிட்டான இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷ் நடிக்க, தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்க இருக்கிறார்கள். ரேவதி வேடத்தில் நடிக்க சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.