பிரான்சில் தொடரும் வேலைநிறுத்தம்
பிரான்சில் ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக 30 சதவிகித விமான சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
ஏர் பிரான்சின் விமானிகள், கேபினட் குழுவினர் மற்றும் தரைத்தள ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி 40 சதவிகிதம் நீண்ட தூர சேவையும், 35 சதவிகிதம் நடுத்தர தூர சேவையும், 25 சதவிகிதம் குறுகிய தூர விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
Air France மற்றும் Joon-யை தவிர மற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் ஏர் பிரான்ஸ் விமானங்களின் சேவை பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17, 18, 23 மற்றும் 24 ம் திகதி வேலைநிறுத்தங்களின் தாக்கங்களை மதிப்பீடு செய்வது என்பது வெகு சீக்கிரமான ஒன்று என்பதால் இப்போது சரிவர இதன் தாக்கத்தை வரையறுக்க முடியவில்லை என்று ஏர் பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியிலிருந்து துவங்கிய இந்த ஏழு நாள் வேலை நிறுத்தத்தில் 170 மில்லியன் யூரோக்கள் (209 மில்லியன் டாலர்கள்) நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் 25 மில்லியன் யூரோக்களை செலவழித்து வருவதாக விமான நிறுவனம் கூறியுள்ள நிலையில், மேலும் விமானங்களை வாங்குவதற்கும், வேலைகளை உருவாக்குவதற்கும் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் இவர்கள் கேட்கும் அளவிற்கு ஊதிய உயர்வு தர முடியாது என விமான நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.