ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் கையளிப்பு
இந்தியாவில் கோவா கப்பல்களை நிர்மாணிக்கும் பகுதியில் இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் நேற்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருத்தினராக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடற்படையின் விசேட அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இதன் பின்னர் கப்பலை கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.கப்பலின் கட்டளைத் தளபதி கப்டன் சமன் பெரேராவிடம் இந்த கப்பல் கையளிக்கப்பட்டது.
இதற்கான கடற்படை சம்பிரதாய நிகழ்வுகள் இதனைத் தொடர்ந்து இடம்பெற்றன. பிரதமர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டனர். நவீன வசதிகளைக் கொண்ட இந்த கப்பலின் நீளம் 107.5 மீற்றராகும் அகலம் 13.6 மீற்றராகும்.18 அதிகாரிகளும் 100 கடற்படைவீரர்களும் பணியாற்றக்கூடியதாக இது அமைந்துள்ளது. சிறிய ஹெலிகப்டர்கள் இதில் இறங்ககக்கூடிய வசதியும் உண்டு.
இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் தலைமையில் மதத்தலைவர்கள் கடற்படை மற்றும் நீரியல்; வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க , பாதுகாப்பு இராஜாங் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்சித் சிங் சந்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.