கனடாவின் நிதி தலைநகரான ரொரண்டோவில் நாளை முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளா்வு!

கனடாவின் நிதி தலைநகரான ரொரண்டோவில் நாளை முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளா்வு!

கனடாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாட்டின் நிதித் தலைநகரமான ரொராண்டோவில் கொரோனா தொற்று நோயை அடுத்து முடக்கப்பட்டிருந்த வணிக நிறுவனங்கள் 3 மாதங்களின் பின்னா் நாளை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டவுள்ளன.

ஒன்ராறியோ மாகாணத்தின் ஏனைய பிராந்தியங்களைப் போன்று ரொரண்டோவிலும் வணிக நிறுவனங்களை திறக்க புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என மாகாண முதல்வா் டக் போர்ட் தெரிவித்துள்ளாா்.

ரொரண்டோ பெரு நகரில் கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்க முடியும் எனவும் நேற்று செய்தியாளா்களிடம பேசிய போர்ட் கூறினாா்.

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்ராறியோ இந்த மாத ஆரம்பத்தில் இருந்து கட்டுப்பாடுகளைத் மெல்லத் தளா்த்தி அதன் பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பித்தது. எனினும் அதிக சனத்தொகை அடா்த்தி கொண்டதுடன், அதிக தொற்று நோயாளா்கள் பதிவான ரொரண்டோ நகரத்தில் கட்டுப்பாடுகள் தொடா்ந்தும் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரொரண்டோ நகரத்தின் சுகாதார, பாதுகாப்பு நிலை குறித்து மாகாண மருத்துவ நிபுணர்களுடன் தினமும் ஆலோசிப்பதாகவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் மாகாண முதல்வா் கேட்டுக்கொண்டாா்.

இதேவேளை, ரொராண்டோவை தலைமையகமாகக் கொண்ட கனடாவின் மிகப் பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குறைந்தபட்சம் செப்டம்பர் வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக ரொராண்டோ மேயர் ஜோன் டோரி கடந்த மாதம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கனடா முழுவதும் கடந்த மாா்ச் முதல் சமூக முடக்கல்கள் அறிவிக்கப்பட்டன.

கனடாவில் கொரோனா தொற்று நோய்க்கு இதுவரை 8,430 பேர் மரணமடைந்துள்ளனா். இன்று செவ்வாய்க்கிழமை வரை 101,337 போ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்களின்படி. ரொராண்டோவில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

மிச்சிகன் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு ஒன்ராறியோவில் உள்ள விண்ட்சர்-எசெக்ஸ் பகுதியில் மட்டுமே இதுவரை கட்டுப்பாடுகள் இறுக்கமாக உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் அதிகளவு புலம்பெயா் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய பண்ணைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளுக்கு நடமாடும் கொரோனா வைரஸ் சோதனை மையங்களை கடந்த சனிக்கிழமை முதல் மாகாண அரசு அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதேவேளை, பிற நாடுகளுடன் எல்லைகளை தொடா்ந்தும் மூடிவைக்க கனடா மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எல்லைகளைத் திறக்குமாறு விமான நிறுவனங்கள் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றபோதும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II