1000

இந்திய-சீன மோதல்: 3ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று

இந்திய-சீன மோதல்: 3ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று

இந்திய-சீன இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 3ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியப் பகுதியில் உள்ள சுஷுல் செக்டாரில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் இரு சுற்றுப் பேச்சுவார்த்தை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனப் பகுதியில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற 2ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறுவதென ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வது தொடர்பாக இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தியத் தரப்புக்கு துணைத் தலைமைத் தளபதி ஹரிந்தர் சிங் தலைமை தாங்கும் நிலையில், சீன தரப்புக்கு திபெத் பிரிவு இராணுவ துணைத் தலைமைத் தளபதி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா – சீன துருப்புக்களிடையே கடந்த 15ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மோதலுக்குப் பின்னர் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டதையடுத்து, தற்போது அதைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II