கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று தொடக்கம் எண்ணப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்ததால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது.

ஆனால், நேரம் செல்லச்செல்ல பா.ஜ.க.வின் முன்னணி நிலவரம் சரியத் தொடங்கியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், நண்பகல் 3 மணி நிலவரப்படி பா.ஜ.க. 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 72 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் வியூகம் வகுத்துள்ளன.

நேற்று பிற்பகல் பெங்களூரில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதன்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியமைக்க உரிமை கோரி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் கடிதமளிக்க உள்ளது.

ஆசிரியர் - Sellakumar