ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்.

ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்.

யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர். 

நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய(16)  தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.  

அதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர். வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். அதனால் அச்சத்திற்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர். 

பின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி , யாழ்.பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான (யுஹா) இலக்கமுடைய இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர். 

இராணுவப் புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறிச் சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள். அதன் போது , மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது , அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை என கூறி சென்றனர். 

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது  பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி இருந்தார். 

அதன் போது , நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக  அச்ச நிலைமையால் தான் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் , தற்போதைய நிலையில் அதனை தாக்கல் செய்துள்ளோம். மனுதாரர்கள் அச்சம் காரணமாக மனு தாக்கல் செய்ய பின்நின்ற போதிலும் குறித்த மனு மீதான விசாரணையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்கொள்ளவுள்ளார் எனும் நம்பிக்கையில் தான் தற்போது மனு தாக்கல் செய்ய முன்வந்தார்கள் என மனு தாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Sellakumar