வாழ்க்கைக்கான ரகசியத்தை கண்டறிந்துள்ள பெண்

வாழ்க்கைக்கான ரகசியத்தை கண்டறிந்துள்ள பெண்

பல நாடுகளை சுற்றித் திரிந்தும் பல ஆண்டுகள் கஷ்டங்கள் அடைந்தும் வாழ்க்கைக்கான ரகசியத்தை கண்டறிந்துள்ளார் கிறிஸ்டைன் டெய்ஷ்.

இவரை பற்றி சுவாரசியமான பதிவைத் தான் பார்க்கப் போகிறோம்,

பார்ப்பதற்கு எளிமையான கிறிஸ்டைன் டெய்ஷ், ஐரோப்பாவை சார்ந்த பெண்ணாவார், இவரது தாயும் தந்தையும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர் ஒரு இந்தியரின் மனைவியும் கூட.

தனது 21 வயதில் இந்தியாவிற்கு முதன்முதலில் வந்திருக்கிறார்.

கலை மற்றும் சிற்பம் சார்ந்த படிப்பைப் பயின்ற இவர் ஆரம்பத்தில் ஓவியம் மற்றும் வரைதல் குறித்து தெரிந்து கொள்வதற்காக தனது பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்

சிறுவயதிலிருந்தே இயற்கையின் மீது ஆர்வம் மிகுந்த கிறிஸ்டைன் டெய்ஷ் மிருகங்கள், மலைகள், மழைகள் காடுகள், மேகங்கள் போன்ற இயற்கையின் கொடைகளை அதிகம் நேசித்திருக்கிறார்.

ஆனால் வாழ்க்கை என்பது கவிதை அல்ல, நாம் விரும்புவதற்கு நேர்மாறான விஷயங்களை கொடுப்பது என்பதை உணர்ந்த இவர், சிறு வயதிலிருந்தே வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தீராத தாகத்துடன் நிறைய கேள்விகளுடன் வளர்ந்திருக்கிறார்

மேலும் பயணங்கள் மட்டுமே அவரின் இந்த தாகம் தீர்க்க உதவி செய்யும் என நம்பியிருக்கிறார்,

இருப்பினும் அப்படி பயணம் செய்வதற்கான போதுமான பணவசதி அவரிடம் இருந்ததில்லை, உணவுக்கு கூட பல நாட்கள் சிரமப்பட வேண்டியிருந்திருக்கிறது.

எவ்வளவு சிரமம் வந்த போதும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஹாலந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஆப்பிரிக்கா வரை சுற்றி இருக்கிறார் இந்த பயணக் காதலி.

பயணத்தின் வழித்துணையாக அவரிடம் புத்தகங்கள் மட்டுமே இருந்துள்ளன. மேலும் பலமுறை அவர் திறந்த வயல்வெளிகளிலும் காடுகளிலும் தங்கியபடி தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

அவரது தனது இருபதுகளின் இறுதியில் வட ஆப்பிரிக்காவிற்கு சென்ற போது சமூகநல ஆர்வலராக பணி புரிந்திருக்கிறார், அங்கு குழந்தைகளுக்கான பள்ளிகள் அமைத்தல் போன்றவற்றிற்கு உதவி செய்திருக்கிறார்.

அப்போது 1985ல் நடந்த எத்தியோப்பிய பஞ்சத்தின் போது அங்கு தன்னார்வலராக வேலை செய்த சமயத்தில்தான் மரணத்தை வெகு அருகில் பார்த்திருக்கிறார்.

"நான் மிகுந்த ஏழை பெண்மணி. எனது பாக்கெட்கள் எப்போதும் காலியாகத்தான் இருந்தன. ஆனால் இந்த உலகை முழுவதுமாய் ரசிக்க நான் விரும்பினேன்.

அதுமட்டுமின்றி என் வாழ்வின் துயரங்கள் பற்றியும் ஆராய முற்பட்டேன் ” என்று தனது வறுமை பற்றியும் தன்னம்பிக்கை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறார் இந்த சாதனை பெண்மணி.

ஆப்பிரிக்காவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்த பின் அங்கிருந்து தென் அமெரிக்காவிற்கு சென்று அங்கும் 6 ஆண்டுகள் சமூக சேவை பணியாளராக பணிபுரிந்திருக்கிறார்

அப்போதும் வாழ்வை பற்றிய இவரது தேடல்களும் தாகங்களும் தொடர்ந்திருக்கின்றன, ஒருமுறை பிரேசிலில் இந்தியாவின் லடாக்கை சேர்ந்த ஒருவரை இவர் சந்திக்க நேர்ந்தது.

அந்த சந்திப்பு மீண்டும் இந்தியாவை நோக்கி இவரை ஈர்த்தது. அதன் பிறகு இந்தியா வந்த இவர் சில வருடங்கள் இந்தியாவில் வாழ்க்கையை தனியாக நடத்தியிருக்கிறார்.

அதன் பின் ஒரு நாள்அவரது கணவரை சந்தித்திருக்கிறார், திருமணத்திற்கு பின் சாரநாத்தில் இருக்க ஆரம்பித்தார் கிறிஸ்டைன்.

சாரநாத் என்பது அதிகமான வெப்பமுடைய ஊர்களில் ஒன்று. ஆகவே ஒவ்வொரு கோடைக்கும் சில மாதங்கள் இவர் லடாக்கில் இருந்திருக்கிறார்.

ஒருமுறை அங்குள்ள பெண்கள் திருவிழாவில் கலந்து கொள்ள நேரிட்ட போது அங்கு சீனா அமெரிக்க பெண்மணி ஒருவர் தியானம் கற்று கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரையும் அறியாமல் அவர் வசம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

அவர் Falun dafa எனும் பழமையான தியான முறைகளை கற்று கொடுத்து கொண்டிருந்தார்.

ஏறத்தாழ 55 நாடுகளுக்கு சென்றிருக்கும் கிறிஸ்டைன் இது போன்ற நிறைய ஆன்மீகங்களை கடந்ததால் அத்தனை எளிதாக அதனை நம்பவில்லை.

அதன் பின் சில வருடங்கள் Falun dafa தியான முறைகள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிறிஸ்டைன், இறுதியாக அதன் அமைதியான பயிற்சி முறைகளை பழக ஆரம்பித்திருக்கிறார்.

கற்றுக்கொண்டு 15 வருடங்கள் கழிந்து விட்டது எனும் கிறிஸ்டைன் இப்போது தான் முற்றிலும் புதிய ஆளாக மாறியிருப்பதாக கூறுகிறார் .

"சந்தோஷமான ஆரோக்கியமான மனுஷியாக நான் மாறியிருக்கிறேன், இப்போது என் நெஞ்சம் முழுதும் அன்பு நிரம்பி வழிகிறது. கருணை பெருக்கெடுத்து ஓடுகிறது" என்று புன்னகைத்தபடி தொடர்கிறார் பேட்டியை.

தான் பெற்ற பலனை 2010ற்கு பிறகு பல பள்ளிகளில் இந்த தியான முறையை ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறார்

இதற்காக லடாக்கிலும் வட இந்தியாவிலும் 60 பள்ளிகளுக்கு மேல் விஜயம் செய்திருக்கிறார்.

ஆசிரியர்களும் மாணவர்களும் இவரது அனுபவங்கள் மூலம் மனம் கவர பெற்றார்கள் என்று கூறும் இவர்

தனது பயணத்தின் மூலம் நிறைய அன்பையும் நேசத்தையும் பெற்றதாக கூறி சிலிர்க்கிறார்,

இருப்பினும் அவர் பயணத்தில் அடைந்த மிக சிறந்த விஷயமாக கருதுவது இதயத்தை சென்றடையும் வழி என்று வெகு அமைதியாக கூறுகிறார்

அவர் தனது தேடலின் முடிவாக இந்த உலகில் உள்ள துன்பங்களும் துயரங்களும் வழிகளும் எப்போதும் முடிவடைவதே இல்லை என்று கண்டடைந்திருக்கிறார்.

ஆனால் இருதயத்தின் அடி ஆழத்தில் இருக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தனக்கொரு வழி கிடைத்தது என்று கூறி சிலாகிக்கிறார்.

நேர்மை இரக்கம் மற்றும் பொறுமை வாழ்விற்கு தேவையானவை இந்த மூன்று குணங்கள் மட்டும்தான் அதற்கு Falun dafa வழி செய்து கொடுத்தது என்கிறார் ஐரோப்பாவிலிருந்து பல நாடுகள் பயணித்து இந்தியாவில் வாழ்ந்து வரும் கிறிஸ்டைன் டெய்ஷ்

ஆசிரியர் - Editor