யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை கைது செய்ய பிடியாணை

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை கைது செய்ய பிடியாணை
யாழில் பெண் ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில்  நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டும் மன்றில் தோன்றாதா காரணத்தால் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதித்துறையில் முதன்முறையாக மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக  நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும்.

கோப்பாய் பொலிஸாரால் குற்றப்பத்திரம் இன்று(17) தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் தோன்றாத காரணத்தால், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்.இருபாலை சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில்  நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிரியர் - Sellakumar