ஜோ்மனியில் விடுமுறை காலத்தில் கொவிட்-19 இரண்டாவது அலை ஆபத்து குறித்து எச்சரிக்கை!

ஜோ்மனியில் விடுமுறை காலத்தில் கொவிட்-19 இரண்டாவது அலை ஆபத்து குறித்து எச்சரிக்கை!

ஜோ்மனியில் கோடை விடுமுறை காலத்தில் கொவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலை ஆபத்து உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சா் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார்.

இதனைத் தடுக்க மக்கள் சுகாதார வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் நேற்று திங்கட்கிழமை அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மனியில் கொவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு ஆபத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அவா் தெரிவித்தார்.

ஜேர்மனியில் 159 புதிய கொவிட்-19 தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்தம் உறுதி செய்யப்பட்ட தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 198,963 ஆக அதிகரித்துள்ளதாக என்று ரொபேர்ட் கோச் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

அதேநேரத்தில் ஒரே ஒரு இறப்பு மட்டுமே நேற்று பதிவான நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,064 ஆக உள்ளது.

இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள், முதியோர் பராமரிப்பு மையங்கள், மற்றும் புகலிடக் கோரிக்கையாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் இன்னும் கோவிட்-19 தொற்று நோய் பரவல்கள் உள்ளன என ரொபேர்ட் கோச் நிறுவனம் வெளியிட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் விடுமுறை நாட்களில் ஜோ்மனியர்களின் அதிக நடமாட்டங்கள், பயணங்கள் காரணமாக தொற்று நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என சுகாதார அமைச்சர் ஸ்பான் எச்சரித்தார்.

கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் ஸ்பானிஷ் தீவான மல்லோர்காவில் விடுமுறையைக் கொண்டாடும் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளின் படங்களை கடந்த வார இறுதியில் ஜேர்மன் ஊடகங்கள் வெளியிட்டன.

இந்தப் படங்களில் காணப்படும் பலா் முக கவசங்களை அணியவில்லை. போதுமான சமூக இடைவெளியைப் பிற்பற்றவில்லை.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சா் ஸ்பான், இவ்வாறான கொண்டாட்டங்களுக்கு இது உரிய நேரமல்ல எனக் கூறினார்.

ஆசிரியர் - Editor II