ஆர்ச்சரின் செயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும்: ஆஷ்லி கைல்ஸ்

ஆர்ச்சரின் செயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும்: ஆஷ்லி கைல்ஸ்

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ், அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரின் செயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் என இங்கிலாந்து ஆடவர் அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் தெரிவித்துள்ளார்.

உயிர் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து, ஜொப்ரா ஆர்ச்சர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து ஆஷ்லி கைல்ஸ் மேலும் கூறுகையில், ‘ஆர்ச்சரின் செயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும். இதன் விளைவுகளால் எங்களுக்கு பெருந் தொகை இழப்புகள் ஏற்பட்டிருக்கும். தன்னுடைய செயலில் உள்ள ஆபத்தை அவர் அறிந்தாரா எனத் தெரியாது. இளைஞர் அவர். இளைஞர்கள் தவறு செய்வார்கள். இந்தத் தவறுகளிலிருந்து அவர் பாடம் கற்க வேண்டும். ஒழுங்கு சார்ந்த நடவடிக்கையை ஆர்ச்சர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என கூறினார்.

முன்னதாக 13பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த ஆர்ச்சர், சௌதாம்ப்டனிலிருந்து மன்செஸ்டருக்குச் செல்லும் வழியில் விதிமுறையை மீறி தனது வீட்டுக்குச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒவ்வொரு வீரரின் அடையாள அட்டையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். சௌதாம்ப்டனிலிருந்து மன்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் சென்றுள்ளார்கள். பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். இதில், ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் தற்போது அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனை பின்னர் ஒப்புக்கொண்ட அவர், இதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையிடம் மன்னிப்பும் கோரினார்.

அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆர்ச்சர், தற்போது 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ளார். அதனுடன், கொரோனா பரிசோதனை அவருக்கு 2 முறை நடத்தப்படும். இரு பரிசோதனைகளின் முடிவுகளிலும் அவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அணியினருடன் இணைந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.

ஆசிரியர் - Editor II