சுவிஸில் முன்னணி பாடசாலை ஒன்றின் மீது வழக்குத் தொடர்ந்த இந்திய கோடீஸ்வர குடும்பம்!

சுவிஸில் முன்னணி பாடசாலை ஒன்றின் மீது வழக்குத் தொடர்ந்த இந்திய கோடீஸ்வர குடும்பம்!

சுவிட்சர்லாந்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான Le Rosey மீது இந்திய கோடீஸ்வர குடும்பம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne பகுதியில் வசித்துவரும் பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் குடும்பத்தினரே குறித்த பாடசாலை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்னும் சில வாரங்களில் வாட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

ஓஸ்வால் குடும்பம் சுவிட்சர்லாந்தில் திரவ அம்மோனியா உற்பத்தியில் களமிறங்கி தொழில் செய்து வருகிறது.

இவர்களது இளைய மகள் Gstaad-ல் அமைந்துள்ள Le Rosey என்ற மேட்டுகுடி மக்கள் கல்வி பயிலும் முன்னணி பாடசாலையில் சேர்ந்து கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில், பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் ஆகியோர் தங்கள் இளைய மகளை கொடுமைப்படுத்துதலில் இருந்து பாதுகாக்கவில்லை என்று குற்றம் சாட்டி குறித்த பாடசாலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

2019 மார்ச் 6 ஆம் திகதி, அப்போது 14 வயதான சிறுமி ஓஸ்வால் அழுதபடியே, தமது தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

பதறிப்போன ராதிகா ஓஸ்வால், செய்வதறியாது தமது மூத்த மகளுடன் உடனடியாக அந்த பாடசாலைக்கு விரைந்துள்ளார்.

அங்கே மகளை தேற்றிய அவர், பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் இருதரப்பும் மோதல் போக்கில் விவாதத்தை முடித்துக் கொண்டுள்ளது.

சிறுமி ஓஸ்வாலை சக மாணவர்கள் இன ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் மட்டுமின்றி சில ஆசிரியர்களும் இவ்வாறு ஈடுபடுவதாக அங்குள்ள சில இந்திய வம்சாவளி மாணவர்கள் இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிறுமி ஓஸ்வால் இனி தங்கள் பாடசாலையில் பயில முடியாது என கூறி நிர்வாகத்தினரால் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஓஸ்வால் குடும்பத்தினரின் வரம்பு மீறிய போக்கால் தான், சிறுமி ஓஸ்வாலை இனி அனுமதிக்க முடியாது என முடிவு செய்ததாக கூறும் Le Rosey நிர்வாகம்,

நடந்த சம்பவத்திற்கான விளக்கம் அளித்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து, சட்ட உதவியை நாடியதாகவும் விளக்கமளித்துள்ளது.

தற்போது இந்த வழக்கு வாட் நீதிமன்றத்தில் அடுத்த சில வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இன ரீதியான துன்புறுத்தல்களுக்கு சுவிட்சர்லாந்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என ஓஸ்வால் குடும்பம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II