நானும் உங்களோடு இணைகிறேன்” டோனியைத் தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வு

நானும் உங்களோடு இணைகிறேன்” டோனியைத் தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங்டோனி ஓய்வு அறிவித்து ஒரு மணி நேரத்துக்குள் சுரேஷ் ரெய்னாவும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் ஓய்வு பெறுவதாக திடீரெனப் பகிர்ந்தார் மகேந்திர சிங் டோனி. அவர் அறிவிப்பு தந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள், சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரெய்னா, “டோனி, உங்களுடன் இணைந்து விளையாடியது என்றுமே இனிமையாக இருந்ததே தவிர வேறெப்படியும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமிதத்துடன், நானும் உங்களோடு இந்தப் பயணத்தில் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டோனி, ரெய்னா இருவருமே ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள். இருவருமே நெருங்கிய நண்பர்களும் கூட. தோனியின் ஓய்வுக்குப் பின் உடனடியாக ரெய்னாவும் ஓய்வு அறிவித்திருப்பது இவர்களின் நட்புக்கு எடுத்துக்காட்டு என்றே பலர் கூறிவருகின்றனர்.

ரெய்னாவும் டோனியோடு, சென்னையில், ஐ.பி.எல். பயிற்சி முகாமில் உள்ளார். இருவரும் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளனர்.

ரெய்னா 226 ஒரு நாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும், 78 டி20 போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். 2011 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II