இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சவுத்தம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்றாக 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரிஸ்வான் 72 ஓட்டங்களையும், அபிட் அலி 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸ்டுவர்ட் பிரோட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை சாய்த்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ஓட்டங்களை பெற்றது.

மழையின் குறுக்கீடு காரணமாக இரண்டு அணிகளுமே இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடமலேயே போட்டி நிறைவடைந்தது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸெக் கிரவ்லி 53 ஓட்டங்களையும், டொமினிக் சிப்ளி 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும், ஷாயீன் அப்ரிடி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பாகிஸ்தான் அணியின் மொஹமட் ரிஸ்வான் தெரிவானார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 21ஆம் திகதி சவுத்தம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் - Editor II