சம்பியன்ஸ் லீக்: மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச்- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் மோதல்

சம்பியன்ஸ் லீக்: மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச்- பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிகள் மோதல்

ஐரோப்பாவின் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பேயர்ன் முனிச் அணி வெற்றிபெற்று 11ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜோஸ் ஆல்வலேட் விளையாட்டரங்களில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஜேர்மனியின் பேயர்ன் முனிச் கழக அணியும், பிரான்ஸின் லியோன் கழக அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், 18ஆவது நிமிடத்தில் பேயர்ன் முனிச் கழக அணியின் வீரரான செர்ஜ் ஞாப்ரி அணிக்காக முதலாவது கோலை அடித்துக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டியின் 33ஆவது நிமிடத்தில் செர்ஜ் ஞாப்ரி, அணிக்காக இரண்டாவது கோலை அடித்துக் கொடுத்தார்.

இதனையடுத்து போட்டியின் 88ஆவது நிமிடத்தில், பேயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ரோபர்ட் லெவன்டவ்ஸ்கி, அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.

இதன்படி போட்டியின் இறுதியில் பேயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து 11ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஐந்து முறை சம்பியனான பேயர்ன் முனிச் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஆசிரியர் - Editor II