கனடியர்களுக்குத் தேவையான தடுப்பூசியைப் பெற மேலும் இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

கனடியர்களுக்குத் தேவையான தடுப்பூசியைப் பெற மேலும் இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

கனடியர்களுக்குத் தேவையான மில்லியன் கணக்கான கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் மேலும் இரண்டு அமெரிக்க மருந்து விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் நோவாவாக்ஸ் ஆகிய மருந்து நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் ஃபைசர் மற்றும் மொடர்னாவுடன் இதே போன்ற ஒப்பந்தங்களில் ஒட்டாவா கையெழுத்திட்டது.

இந்த நிறுவனங்களில் மிக சமீபத்திய தடுப்பூசி சோதனைகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளை வெளியிப்படுத்தியுள்ளதாகவும் ட்ரூடோ கூறினார்.

சாத்தியமான தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்று வெற்றிகரமானதாக இருந்தால் கனேடியர்களுக்குத் தேவையான அளவைப் பெற்றுக்கொள்ள இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.

தடுப்பூசிகள் இன்னும் 2 அல்லது 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. இந்தத் தடுப்பூசிகள் கனேடிய சுகாதாரத் துறையினரால் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அவை மக்களுக்கு வழங்கப்படும்

கனடாவுக்குக் குறைந்தது 88 மில்லியன் சொட்டு தடுப்பூசிகள் தேவைப்படலாம் என ட்ரூடோ கூறுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டால் ஏதேனும் ஒரு சாத்தியமாக தடுப்பூசியைப் பெற முடியும் எனவும் ட்ரூடோ குறிப்பிட்டார்.

மேரிலாண்டைத் தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனமான நோவாவாக்ஸுடனான 76 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நோவாவாக்ஸ் தடுப்பூசி இப்போது அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் 2-ஆம் கட்ட பரிசோதனைகளில் உள்ளது.

ஜோன்சன் & ஜோன்சனுடனான ஒப்பந்தத்தின் கீழ் 38 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவுக்கு கிடைக்கும். இந்தத் தடுப்பூசியின் 1 மற்றும் 2-ஆம் கட்ட பரிசோதனை அமெரிக்க மற்றும் பெல்ஜியத்தில் நடந்து வருகிறது.

ஆசிரியர் - Editor II