காப்பகத்தில் இருந்து தப்பிய 5 வன விலங்குகளால் பரபரப்பு

காப்பகத்தில் இருந்து தப்பிய 5 வன விலங்குகளால் பரபரப்பு

மேற்கு ஜேர்மனியில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து சிங்கம், புலி உள்ளிட்ட 5 வன விலங்குகள் தப்பியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Lunebach பகுதியில் அமைந்துள்ளது Eifel வனவிலங்கு காப்பகம்.

இப்பகுதியில் கடந்த சில தினக்களாக அடாது பெய்யும் மழையால் வன விலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு அரண் சேதமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த காப்பகத்தில் இருந்து 2 சிங்கம், 2 புலி மற்றும் சிறுத்தை ஒன்றும் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து காப்பக பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளூர் பொலிசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குறித்த பகுதி மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வன விலங்கு காப்பக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பை விட்டு இரவு நேரங்களில் எவரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தப்பிய மிருகங்கள் அனைத்தும் வன விலங்கு காப்பக பகுதியில் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

30 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட Eifel வன விலங்கு காப்பகத்தில் மொத்தம் 60 வகையான 400 விலங்குகள் உள்ளன.

வெள்ளியன்று நடந்த இச்சம்பவம் இந்த காப்பகத்தில் புதிதல்ல, இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று 2 சிங்கங்கள் தப்பியுள்ளன.

அதில் ஒன்றை காப்பக அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. எஞ்சிய ஒன்றை வலையில் சிக்க வைத்து மீண்டும் காப்பகத்தில் அடைத்தனர்.

ஆசிரியர் - Editor