பிருந்தாவன் பூங்கா இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

பிருந்தாவன் பூங்கா இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான பிருந்தாவன் பூங்காவை இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்க கே.ஆர்.எஸ். அணை நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ளது.

இந்த அணையையொட்டி பிருந்தாவன் பூங்காவும் அமைந்திருக்கிறது. இந்த பூங்கா மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பிருந்தாவன் பூங்கா மூடப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. இதனால் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான பிருந்தாவன் பூங்காவை இன்றுமுதல் மீண்டும் திறக்க கே.ஆர்.எஸ். அணை நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கே.ஆர்.எஸ். அணை நிர்வாக அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,

‘கொரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக பிருந்தாவன் பூங்கா மூடப்பட்டுள்ளது. தசரா விழா நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அரசு பிருந்தாவன் பூங்காவை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி நாளை(அதாவது இன்று) முதல் பிருந்தாவன் பூங்கா திறக்கப்பட்டு அனைத்து கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட உள்ளன. பூங்காவை திறந்து பொதுமக்களை அனுமதிக்க மாநில அரசு உரிய அனுமதி வழங்கி உள்ளது.

பிருந்தாவன் பூங்காவில் வழக்கம்போல மாலை 6 மணிக்கு மேல் மின்விளக்கு அலங்காரம், இசை நீருற்று நிகழ்ச்சி, படகு சவாரி போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II