எதிர்வரும் ஞாயிறு முதல் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யத் தடை!

எதிர்வரும் ஞாயிறு முதல் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யத் தடை!

அமெரிக்காவில் வரும் ஞாயிறு முதல் டிக்டாக், வி சாட் உள்ளிட்ட சீன  செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்தியா சீனா எல்லை மோதலை தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சீனாவை சேர்ந்த டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பைக் கருதியும் அமெரிக்காவும் டிக் டாக்  செயலியைத் தடை செய்ய திட்டமிடுள்ளது. 

இருப்பினும் டிக்டாக் மற்றும் வி சாட்டின் தடைக்கு நவம்பர் 12 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க செயல்பாடுகளுக்கான டிக் டாக்கின் உரிமத்தை வாங்க Byte Dance  நிறுவனத்துடன் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் டிக்டாக் மற்றும் வி சாட் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்ய வரும் ஞாயிறு முதல் தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மூலம் வி சாட், டிக்டாக் உள்ளிட்டவை கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரண்டு செயலிகளை அங்கு புதிதாக பதிவிறக்கம் செய்ய முடியாது.

இது குறித்து தெரிவித்துள்ள வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், சீன கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதற்கு இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நோக்கங்களையும் நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் தற்போது பிளே ஸ்டோர்களில் இருந்து மட்டுமே செயலிகள் நீக்கப்படுவதாகவும் பதிவிறக்கம் செய்தவர்கள் ஏற்கனவே அரசு விடுத்துள்ள காலக்கெடுவான நவம்பர் 12 வரை பயன்படுத்தாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் டிக்டோக் குறித்த தேசிய பாதுகாப்பு கவலைகள்  தீர்க்கப்பட்டால், உத்தரவு நீக்கப்பட்டு செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரலாம் எனவும் அந்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II