வடிகான் மூடி உடைந்தமையால் மாணவர்கள் பாதிப்பு!

வடிகான் மூடி உடைந்தமையால் மாணவர்கள் பாதிப்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய வீதியில் காணப்படும் வடிகான் மூடி சேதமடைந்துள்ளமை காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து நீண்டகாலமாக தடைப்பட்டு காணப்படுகின்றது.

வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய வீதியின் ஊடாக பாடசாலை மாணவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் வீதியில் உள்ள மக்கள் தங்களது போக்குவரத்தினை பாரிய சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியில் காணப்படும் வடிகான் மூடி சேதமடைந்துள்ளமை காரணமாக வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்திற்கு வரும் மாணவர்கள் அச்சத்துடன் வருவதையும், வடிகானை கடக்கும் போது அதனுள் விழக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முறைப்பாடு சமர்பிக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இதுவரை எந்தவித கரிசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் வீதியிலுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய மாணவர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச சபை உரிய வடிகான் மூடியினை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆசிரியர் - Editor II