இலங்கையில் மாத்திரம் நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய் – இன்று உலக இதய தினம்.

இலங்கையில் மாத்திரம் நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய் – இன்று உலக இதய தினம்.

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி உலக இதய அறக்கட்டளையால் ஒழுங்கு செய்யப்படுகிறது.

உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இலங்கையில் இதயம்சார் நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பதாக இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருடாந்தம் சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது.

தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகும்.

இதனால் உலகலாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17.9 மில்லியன் உயிரிழப்புக்கள் பதிவாகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள மொத்த சனத்தொகையில் 1.13 பில்லியன் மக்கள் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு,

இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பகுதியினர் குறைந்த அல்லது மத்திய வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றா நோய்களால் பதிவாகின்ற மரணங்களில் 50 வீத மரணங்களுக்கான பிரதான காரணியாகவும் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினையே காணப்படுகிறது.

சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளாமை, செயற்பாடுகளில் மந்த நிலைமை, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்பொருட்களை உபயோகித்தல் என்பன இதற்காக பிரதான காரணிகளாக கூறப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மொத்த சனத்தொகையில் 26.5 சதவீதமானோர் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது.

இலங்கையில் அதிக இரத்த அழுத்தம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் 35 சதவீதமானோர் உரிய முறையில் மருந்துகளை உட்கொள்வதில்லை என்பதோடு,

30 சதவீதமானோர் தமக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளது என்பதையே அறியாமலுள்ளனர் என கூறப்படுகிறது.

2016 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி தொற்றா நோய்களால் பதிவாகும் மரணம் 83 சதவீதமாகும். இதில் 34 சதவீத மரணம் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளினாலாகும்.

அதிக இரத்த அழுத்தமானது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதோடு, இதன் காரணமாக இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உடலிலுள்ள முக்கிய பாகங்களும் பாதிப்படையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II