ஐ.பி.எல்.: பெங்களூரை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி!

ஐ.பி.எல்.: பெங்களூரை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், பிரித்வீ ஷா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளையும், இசுரு உதான மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் டெல்லி அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அணித்தலைவர் விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 4 விக்கெட்டுகளையும் என்ரிச் நோட்ஜே மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்த டெல்லி சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி, ஒன்றில் தோல்வியை பதிவு செய்த டெல்லி அணி 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தோல்வியை தழுவிய பெங்களூர் அணி, ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி இரண்டில் தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆசிரியர் - Editor II