ஆண்டொன்றிற்கு 200,000பேருக்கு அல்சீமர் பிரச்சனை : பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிப்பு

ஆண்டொன்றிற்கு 200,000பேருக்கு அல்சீமர் பிரச்சனை : பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிப்பு

பிரான்சில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட இருக்கும், அல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தின் வேலைகள் முடிந்ததும் அங்கு 120 நோயாளிகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.

நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் பரிசோதனை முறையில் செயல்பட்டு வரும் அல்சீமர் கிராமம் ஒன்றைப் பின்பற்றி பிரான்சும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் சாதாரண வாழ்வு வாழும் உணர்வை அளிக்கும் வகையில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

பிரான்சில் ஒரு மில்லியனுக்கு அதிகமானவர்கள் அல்சீமர் மற்றும் இதர டிமென்ஷியா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டொன்றிற்கு 200,000பேருக்கு அல்சீமர் பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்படுவதாக பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் எதுவும் அல்சீமர் நோயை குணமாக்கக் கூடியதாக இல்லை. இந்த அல்சீமர் கிராமம் பிரான்சில் உள்ள ஒரு சாதாரண நகரம் போலவே இருக்கும், ஒரு வழக்கமான வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு அது உருவாக்கப்படுகிறது.

பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், வேலி எதுவும் இருக்காது.

மருத்துமனையில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த கிராமத்தில் மருந்து சிகிச்சைகள் முதன்மையாக கருதப்படாது.

உதவியாளர்களும் சீருடை அணியாமல் சாதாரண உடையே அணிந்திருப்பார்கள். நெதர்லாந்தை பின்பற்றி இந்த கிராமம் உருவாக்கப்பட்டாலும், இங்கு ஒரு ஆராய்ச்சி அமைப்பும் இருக்கும், அதன் நோக்கம் பாரம்பரிய முறைப்படி சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனைகளுடன் இந்த கிராமத்தில் சிகிச்சை பெறுவோரின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு நோக்குவதாகும்.

ஆய்வாளர்களும் நோயாளிகள் வசிக்கும் கிராமத்திலேயே வசிப்பார்கள். 100 உதவியாளர்களும், தன்னார்வலர்களும் சிகிச்சையில் உதவுவார்கள்.

நோயாளிகளின் மனவியல் தனிமையைப் போக்குவதற்காக பழக்குவிக்கப்பட்ட நாய்களும் இந்த கிராமத்தில் இருக்கும்.

இங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டும் அமைக்கப்படும், நோயாளிகள் பொருட்களை வாங்கிவிட்டு கட்டணம் செலுத்த மறந்துவிட்டாலும் அவர்களது உதவியாளர்கள் அவற்றைப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.

ஆசிரியர் - Editor