மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும்

மஞ்சளின் மகத்துவம் - ஆன்மீக வாழ்விலும் !! ஆரோக்கிய வாழ்விலும்

தமிழர்களின் ஆன்மீகத்திலும், உணவிலும், மருத்துவத்திலும் மஞ்சளுக்கு என ஒரு மகத்தான இடம் உண்டு. மஞ்சளில் குர்க்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. 


மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. 


முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.


இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும்.


மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான்.


ஆன்மீகத்தில் மஞ்சள் : 


புதிதாக ஒரு வீட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை சாமி படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.


புத்தாடை அணியும் முன் அதில் சிறிதளவு மஞ்சள் வைத்து அணிவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால், நோய் கிருமிகள் நம்மை அண்டாது. 


பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவார்கள்.


திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளித்து விளையாடுவார்கள்.


வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.


ஆரோக்கிய வாழ்விற்கும், அழகான சருமத்திற்கும் :


பொதுவாக இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 


மஞ்சள் ஒரு இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் பயன்படுத்தப் படுகிறது. 


நீண்ட காலமாகவே தமிழக பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.


மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. 


மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்து சருமத்தை கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் கரும்புள்ளிகளையும், சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பும் கொடுக்கும்.


சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து, தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். 


கால்களில் உள்ள வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.


அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.  


மஞ்சள் பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. 


நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. 


மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். 


சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றின் மேல் பூசினால், நோய் தீரும். 


பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. 


விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். 


மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  


மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். 

ஆசிரியர் - Editor