எங்கள் புகைப்படங்கள்; எங்கள் விருப்பம் சார்ந்தவை : வைரல் போட்டோஷூட் தம்பதியினரின் பேட்டி

எங்கள் புகைப்படங்கள்; எங்கள் விருப்பம் சார்ந்தவை : வைரல் போட்டோஷூட் தம்பதியினரின் பேட்டி

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைக் குவித்தது.

திருமணம் முடிந்தவுடன் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் ரொமாண்ட்டிக் போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் ‘கணவனிடம் காட்டவேண்டியதை பொது வெளியிலா காட்டுவது?’ என்று தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் ‘எங்கள் புகைப்படங்கள்; எங்கள் விருப்பம் சார்ந்தது’ என்றுக்கூறி, இப்போதுவரை தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்காமல் துணிச்சலுடன் வைத்துள்ளார்கள் கேரளாவைச் சேர்ந்த துணிச்சல் தம்பதியான ஹிருஷி கார்த்திகேயனும் அவரது மனைவி லட்சுமியும்.

பெரும்பாலும் திருமணத்திற்கு முன்புதான் ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்துவார்கள். ஆனால், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட,இத்தம்பதி கொரோனா காரணமாக திருமணத்திற்கு முந்தைய ஃப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை செய்துகொள்ள முடியாததால், திருமணத்தை முடித்தப்பிறகு எடுத்துக்கொள்ள திட்டமிட்டார்கள். கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் தேனிலவைக் கொண்டாடியவர்கள், தங்கள் நண்பர் அகில் கார்த்திகேயனின் உதவியுடன்தான் இந்த வைரல் போட்டோஷூட்டை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தி நியூஸ் மினிட் இணையத்திற்கு ஹிருஷி கார்த்திகேயன் அளித்தப் பேட்டியில், ”பெரும்பாலான தம்பதிகள் தங்கள் போட்டோ ஷூட்களீல் பாரம்பரியமான வேஷ்டி சேலை அணிந்தே கோயிலைச் சுற்றி நடக்கிறார்கள். ஆனால், நாங்கள் வித்தியாசமாக ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பினோம். அதனால்தான், இப்படியொரு போட்டோ ஷூட் செய்தோம். ஆனால், நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம்.

எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்? இது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர். கேரளாவில் ஒரு பெண் சேலையைத் தவிர வேறு எதையும் அணிந்தால் ஆண்களின் பார்வை உடனடியாக மாறிவிடுகிறது. எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட்டிற்கு யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் வேதனையுடன்.

அவரைத்தொடர்ந்து பேசிய லட்சுமி, ”ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிர்ந்தபோது பலரும் விமர்சித்தார்கள். சில கருத்துகளுக்கு பதில் சொல்ல முடிந்தது. பின்பு விமர்சனங்கள் அதிகமாகவே புறக்கணிக்க முடிவு செய்தோம். ஆனால், எனது தூரத்து உறவினர்களும் பக்கத்துவீட்டுக் காரர்களும் எனது பெற்றோரிடம் இதனையெல்லாம் புகாராக கூறிவிட்டார்கள். ‘நான்கு சுவர்களுக்குள் செய்யவேண்டியதை பொதுவெளியிலா செய்வது?… நீங்கள் கீழே ஆடை அணிந்திருக்கிறீர்களா?’ என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், மக்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தார்கள் எனது பெற்றோர். இவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து என்னுடைய எனர்ஜியை வீணாக்க விரும்பவில்லை” என்கிறார், உற்சாகமுடன்.

ஆசிரியர் - Editor II