வரலாற்று வெற்றியை பதிவு செய்த கத்துக்குட்டி அணி

வரலாற்று வெற்றியை பதிவு செய்த கத்துக்குட்டி அணி

ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை முதல் முறையாக வீழ்த்தியுள்ளது.

ஸ்காட்லந்தின் எடின்பர்க் நகரில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, ஸ்காட்லாந்து அணியில் கிராஸ் மற்றும் கோயெட்சர் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.

கிராஸ் 39 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்தார். அதன் பின்னர் மெக்லியோட், கோயெட்சர் உடன் கைகோர்த்தார். அப்போது 58 ஓட்டங்கள் எடுத்திருந்த கோயெட்சரும் ஆட்டமிழந்தார்.

தனது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்தை மிரட்டிய மெக்லியோட், 94 பந்துகளில் 16 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 140 ஓட்டங்கள் விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய முன்சே 55 ஓட்டங்கள் குவிக்க, ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் , பிளங்கெட் இருவரும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த அலெக்ஸ் ஹால்ஸ், பேர்ஸ்டோவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இருவரும் இங்கிலாந்தின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்நிலையில், 59 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்த பேர்ஸ்டோவ் அவுட் ஆனார். அவரது ஓட்டங்களில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, ஜோ ரூட் 29 ஓட்டங்களிலும், ஹால்ஸ் 52 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் அவுட் ஆனாலும், மொயின் அலி 46 எடுத்தார்.

Reuters

கடைசியாக லியாம் பிளங்கெட் ஒற்றை ஆளாய் போராடினார். இங்கிலாந்தின் வெற்றிக்கு 12 பந்துகளில் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்று இருந்த நிலையில், 49வது ஓவரில் 3 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.

அந்த ஓவரின் 5வது பந்தில் கடைசி விக்கெட்டான மார்க் வுட் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 48.5வது ஓவரில் 365 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணியில் பிளங்கெட் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தி, வரலாற்று வெற்றியாக பதிவு செய்துள்ளது. மேலும், ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor