நாடாளுமன்றம் பொது இடம் இல்லை! கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர்

நாடாளுமன்றம் பொது இடம் இல்லை! கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர்

இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவது மற்றும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா பரவல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முக கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மத்தியில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியும் காணப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சஜித் பிரேமதாச இதனை சுட்டிக்காட்டியதை அடுத்து சபாநாயகர் முக கவசத்தை அணிந்து கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் உரிய சுகாதார ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களை ஒரு மீற்றர் இடைவெளி விட்டு, சீர் செய்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார்.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், கொரோனா வைரஸ் பரவலை தடுத்த அரசாங்கம் கொண்டு வந்துள்ள விதிமுறைகளை உயரிய நாடாளுமன்றத்திற்கு அமுல்படுத்த சபாநாயகர் தவறியுள்ளமை குறித்து தான் வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இதன்போது சபையில் பேசிய சுகாதார அமைச்சர், நாடாளுமன்றம் பொது இடமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவை என்றால், சபையில் முக கவசம் அணியாமல் உரையாற்ற முடியும். சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அவர்களின் கடமை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சரின் கருத்து ஊடாக நாட்டின் சட்டம் ஏனைய நபர்களுக்கு ஒரு விதமாகவும் நாடாளுமன்றத்தில் வேறு விதமாக அமுல்படுத்துவதை காண முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II