போதைப்பொருள் கடத்தல்- அரசியல்வாதிகளின் பெயர் வெளிவருவதைத் தடுக்கவே மகாந்துரே மதுஸ் கொலை- ஜே.வி.வி தகவல்

போதைப்பொருள் கடத்தல்- அரசியல்வாதிகளின் பெயர் வெளிவருவதைத் தடுக்கவே மகாந்துரே மதுஸ் கொலை- ஜே.வி.வி தகவல்

இலங்கை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் நடவடிக்கைகளோடு தொடர்புள்ளவர்கள் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தலில் பிரபல்ய மன்னனும், பாதாள உலகத் தலைவருமான மாகந்துரே மதுஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

இன்று செய்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு மாளிகாவத்தையில் மகாந்துரே மதுஸ் படுகொலை செய்யப்பட்டிருந்தார். பொலிஸாரின் காவலிவலில் இருந்து இவர் எவ்வாறு கொழும்பு நகரின் பகுதியொன்றில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

போதைப் பொருள் கடத்தலோடு தொடர்புடைய மூத்த அரசியல்வாதகள் பலரின் பெயர்களை மகாந்துரே மதுஸ் வெளியிட்டுவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர் படுகொலை செய்யப்பட்டதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் விஜித கேரத் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் ஆரம்பமானதும் விஜித கேரத் இவ்வாறு கூறியுள்ளார்.

மாகந்துரே மதுஸ் கொலை செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய விடயமல்ல. ஆனால் அதுபோன்ற கொலைகள் இலங்கையில் இதற்கு முன்னரும் அரங்கேறியிருக்கின்றன. ஆனால் இந்தக் கொலை மூலம் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மற்றும் அதனுடன் தொடர்பிருந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் அம்பலமாகவுள்ளமை தடுக்கப்பட்டுள்ளதாக விஜித கேரத் சுட்டிக்காட்டினார்.

டுபாயில் இருந்து தனியார் ஊடகமொன்றுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் மதுஸ் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் என்பதுக்கும் அதிகமான அரசியல்வாதிகள் தன்னுடன் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்பில் இருப்பதை அவர் உறுதிப்படக் கூறியிருந்தார்.

இவ்வாறாதொரு நிலையில் மகாந்துரே மதுஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆகவே கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மகாந்துரே மதுஸ் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற கேள்விகள் எழுவதாகச் சுட்டிக்காட்டிய விஜித கேரத், போதைப் பொருள் கடத்தலோடு தொடர்புள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவந்துவிடும் என்பதாலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் குறிப்பிட்டார்.

ஆசிரியர் - Editor II