சீனாவுடன் போருக்குத் தயாரென அமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில் திருகோணமலையில் கூட்டு ஒத்திகை!

சீனாவுடன் போருக்குத் தயாரென அமைச்சர் அமித்ஷா கூறிய நிலையில் திருகோணமலையில் கூட்டு ஒத்திகை!

இந்தியா எப்போதும் சீனாவுடனான போருக்குத் தயராகவே இருப்பதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை இந்திய இலங்கை கடற்படையினரின் மூன்றுநாள் கூட்டு ஒத்திகை தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலைக் கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒத்திகை வருடா வருடம் நடைபெறும் ஸ்லிம்நெக்ஸ் ஒத்திகையென இந்திய இலங்கைக் கடற்படைகளின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவின் தென் பிராந்தியத்தில் உள்ள குவாங்டொங் மாகாணத்திலுள்ள இராணுவ படைத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜின்பிங், போருக்குத் தயாராக இருக்குமாறு இராணுவத்தினர் மத்தியில் கூறியிருந்தார். சீன ஜனாதிபதியின் கருத்துக்குப் பதலிடியாகவே ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளிட்ட அமைச்சர் அமித்ஷா போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாகக் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் இன்று திருகோணமலைக் கடற்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு ஒத்திகை மூலோபாய நலன்கள் சார்ந்ததென இந்திய இலங்கை கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பும் அதன் மூலமான செயற்பாடுகளுக்கும் இந்தக் கூட்டு ஒத்திகை வழி வகுக்குமெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பயிற்சியின் மூலம் இந்திய இலங்கை கடற்படையினர் மத்தியிலான இயங்தளத்தை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கான விமான எதிர்ப்பு ஆயுதங்களை பரீட்சிக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்ளக் கூடிய போரில் ஈடுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். காமோத்திரா ஹில்டன் ஆகிய கப்பல்களையும், செட்டாக் ஹெலிக்கொப்டர்கள், டோர்னியர் கடலோர ரோந்து விமானம் போன்றவற்றையும் இந்தியக் கடற்படை இந்த ஒத்திகையின்போது இந்தியா பரீட்சித்துப் பார்க்கவுள்ளது.

இந்திய இலங்கை ஆகிய இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் படையினருக்கான ஒத்துழைப்புச் செயற்பாடுகள். உதவிகள், தகவல் பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் இடம்பெறும் இவ்வாறான பயிற்சிகள் அனைத்தும் இந்தியப் பிராந்திய நலன் சார்ந்ததென கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதகாரிகள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

இதேவேளை இந்தியா- சீனா ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சினை கடந்த ஆறு மாதங்களாக நீடித்துவரும் நிலையில், அமெரிக்கா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பிரச்சினையும் மேலும் அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியிலேயே இந்திய போருக்குத் தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி  ஜின்பிங், தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளாரா என்பதும் இந்திய போருக்குத் தயராகவுள்ளதென்ற இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்புகளும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில் திருகோணமலைக் கடற்பரப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய இலங்கைக் கடற்படையின் கூட்டு ஒத்துகை வருடாந்தப் பயிற்சி நிகழ்வாக இருந்தாலும், சீனாவுக்கு எதிராகப் போர் ஒன்று ஆரம்பித்தால் இலங்கையைத் தம் பக்கம் வைத்திருப்பதற்கான இந்தியத் இராணுவத் தந்திரோபாயமாகவும் இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் இலங்கையில் தற்போது பதவியில் இருக்கும் ராஜபக்ச அரசாங்கம், சீன சார்பு நிலைப்பாட்டையே கூடுதலாகக் கொண்டிருக்கின்றது.

ஆசிரியர் - Editor II