காவிரி மேலாண்மை ஆணையம்: காலம் தாழ்த்த கர்நாடகா செய்த செயல்

காவிரி மேலாண்மை ஆணையம்: காலம் தாழ்த்த கர்நாடகா செய்த செயல்

மத்திய அரசு விதித்த கெடு முடிந்த நிலையிலும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை இன்னும் அறிவிக்கவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த மத்திய அரசு அதன் தலைவராக நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேனையும் நியமித்தது. ஆணையத்தில் தமிழகத்தின் சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில் குமார் ஆகியோரை உறுப்பினர்களாக நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் இந்த விடயத்தில் கர்நாடகா காலம் தாழ்த்திய நிலையில் ஜூன் 12-ம் திகதிக்குள் உறுப்பினர்களை பரிந்துரைக்க மத்திய அரசு கெடு விதித்திருந்தது.

அது நேற்றுடன் முடிந்த நிலையில் இதுவரை கர்நாடக அரசு உறுப்பினர்களின் பட்டியலை அளிக்கவில்லை. இதனால் காவிரி ஆணையம் செயல்பாட்டிற்கு வருவது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கே.ஆர்.எஸ். அணையில் நேற்று நிலவரப்படி 82.8 அடிக்கு நீர் இருந்தது. 124 அடி உயரம் கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 17,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வரும் நிலையில் அந்த அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor