வாழைச்சேனையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை!

வாழைச்சேனையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லாத சந்தர்ப்பத்திலும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மொத்தம் 31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் சென்ற இடங்களில் கடமையாற்றியவர்கள், வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் விபரங்கள் திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் தொழில் புரியும் அன்றாட தொழிலாளிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை ஐஸ் தொழிற்சாலை ஊழியர்கள், கொழும்பு சென்று வந்து தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என இருபத்தைந்து பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், இதன் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் - Editor II