மிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து

மிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஆற்றல் உற்பத்தி நிறுவனமான EBL, Basel-Landschaft பகுதியில் நாளொன்றிற்கு 130,000 கார்களை சார்ஜ் செய்யும் மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

60 சூப்பர் சார்ஜர்கள் உட்பட மொத்தம் 280 சார்ஜிங் மையங்களை நிறுவ உள்ளதாக EBL ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Pratteln பகுதியில் A2 நெடுஞ்சாலையை ஒட்டி அமைய இருக்கும் இந்த மையத்தில், தொழிற்சாலைகள், ஆய்வு அமைப்புகள், மின்சார கார்களுக்கான ஷோரூம்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தும் அறைகள் போன்ற வசதிகளும் இருக்கும்.

EBL நிறுவனம் Basel-Land மற்றும் FHNW University of Applied Sciences and Arts Northwestern Switzerland ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளுகிறது.

2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை வாகனங்களிலும் 15 சதவிகிதம் மின் மயமாக்கப்பட வேண்டும் என விரும்புவதாக சமீபத்தில் சுவிஸ் அரசு குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

EBL தனது அறிக்கையில் இந்த துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான உள் கட்டமைப்பை வழங்க இந்த புதிய மின் வாகன சார்ஜிங் அமைப்பு உதவும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

அது இந்த மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்க பத்தாண்டுகளுக்குள் ஆண்டொன்றிற்கு 20,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இது 5,000 வீடுகளின் மின் தேவையை சந்திக்க தேவையான மின்சாரத்தின் அளவுக்கு சமமாகும்.

இந்த மின்சாரம் முழுவதும் சூரிய மின்சக்தி, நீர் மின்சக்தி மற்றும் மர எரிபொருளிலிருந்து கிடைக்கும் சக்தி என உள்ளூர் ஆற்றல் மூலங்களிலிருந்தே பெறப்படும். 2023ஆம் ஆண்டு முதல் EBL மின் வாகன சார்ஜிங் நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.

ஆசிரியர் - Editor