இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பை பிரித்து தேசத்தை சிதைத்து அழிக்கும் தீவிர செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.-- கஜேந்திரகுமார் தெரிவிப்பு.

இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பை பிரித்து தேசத்தை சிதைத்து அழிக்கும் தீவிர செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.-- கஜேந்திரகுமார் தெரிவிப்பு.
இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பை பிரித்து தமிழர் தேசத்தை சிதைத்து அழிக்கும் தீவிர செயற்பாட்டை திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்ற நிலையில் அந்த அரசிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக முண்டு கொடுத்து வருகின்றமை வேடிக்கையானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்  காங்கேசன்துறை வீதியின் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது..

கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு இடமாற்றம் வந்த போது அவருக்கு இடமாற்றம் வேண்டாமென்றும் அவரை தொடர்ந்தும் அங்கேயே வைத்திருக்க வேண்டுமென்றும் இருந்தும் அவரது இடமாற்றதிற்கான பிரிவுபசார நிகழ்வை கவலைக்குரிய நிகழ்வாக முன்னாள் போராளிகள் அழுததாகவும் ஊடகங்களில் பார்த்திருக்கின்றோம். 

தமிழின அழிப்பில் பங்கெடுத்து கட்டளையிடும் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரிகள் இன்னமும் அந்த இனவழிப்பிற்கு பொறுப்புக்கூறல் நடக்கவில்லை. அவ்வாறு எந்தவித பொறுப்புக் கூறலும் நடக்காதிருக்கையில் அத்தகைய படையதிகாரி ஒருவருக்காக போராளிகள் அழுதமை எமக்கும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஆயினும் அந்த விடயங்களை நாங்கள் இன்னொரு பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டியது மிக அவசியமானது. அதாவது ஏன் அவ்வாறு நடந்தது. இந்த நிலைமைகள் எவ்வாறு எவரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஆழமாக நோக்க வேண்டும். குறிப்பாக புனர்வாழ்வு நிலையங்களில் போராளிகள் மிக மோசமாக அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அத்தோடு அவர்கள் அங்கிருந்து வெளியே வருகின்ற கால சூழலில் இராணுவ அச்சுறுத்தல் மேலோங்கியிருந்தது.

அந்த நேரத்தில் சாதாரண மக்களே அச்சம் கொண்டிருந்த காலம் என்பதால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பல்வேறு அச்சம் அழுத்தங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதிலும் அவர்கள் யாருடன் பேசுவது எங்கு வேலைக்கு செல்வது என்பது தொடர்பில் கூட பெரிய பிரச்சனையே காணப்பட்டது. அதாவது அவர்களுடன் யாரும் பேசினால் அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தினால் இராணுவத்தால் தமக்கேதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று தமிழ் மக்கள் அஞ்சி நடுங்கிய காலமாகவே அன்றைய சூழல் காணப்பட்டது.

இவ்வாறு மக்கள் மத்தியில் பயப்பீதி உருவாக்கப்பட்டிருந்தது. அதே போன்று முன்னாள் போராளிகள் மத்தியிலும் பல்வெறு அழுத்தங்களும் அச்ச உணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக முன்னாள் போராளிகளை மக்களிடமிருந்து நடுத்தெருவில் விடுவது தான் அரச தரப்பின் திட்டமாகவும் இருந்தது. அதனூடாக ஒரு வேலையைக் கொடுத்து அவர்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருப்பதும் நோக்கமாக இருந்தது.

ஆகவே அரசினதும் அதன் படைகளதும் திட்டங்களையும் நோக்கங்களையும் தமிழ் மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அந்த படை அதிகாரி உள்ளிட்ட படைத் தரப்பினர் செய்கின்றவை எல்லாம் கருணை அடிப்படையில் இல்லை என்ற உண்மை நிலைமையையும் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இவையெல்லாம் ஒவ்வொரு திட்டங்களிற்கமைய செயற்படுத்தப்படுகின்ற தென்பதை புரிந்து கொள்கின்ற அதே வேளையில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டதற்கான பொறுப்பையும் நாங்களும் ஏற்க வேண்டும். ஆக வெறுமனே அரசையும் அதன் படைகளான இராணுவத்தையும் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புகழ்ந்து பேசியிருக்கின்றதையும் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நாம் அனைவரும் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது தமிழ் மக்கள் மீது கருணை காட்டுவதாகவோ அல்லது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாகவோ காட்டிக் கொண்டு தமிழர்களைப் பிரித்தாழுகின்ற கைங்கரியத்தையும் தமிழர் தேசத்தை சிதைத்து இருப்பை அழிக்கும் முயற்சியிலும் அரசு தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இதற்கு நல்லாட்சி என்ற பெயரில் கூட்டமைப்பினரும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே நாம் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தமிழர் தேசத்தைக் காப்பாற்றி தமிழர் இருப்பை தக்க வைக்கின்றதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார். 
ஆசிரியர் - Sellakumar