ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யாத ஜனாதிபதி சிறுவர்களைப் பாதுகாப்போம் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க வருவது வேடிக்கையானது.-- சிறீதரன் தெரிவிப்பு.

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யாத ஜனாதிபதி சிறுவர்களைப் பாதுகாப்போம் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க வருவது வேடிக்கையானது.-- சிறீதரன் தெரிவிப்பு.
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக்  காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களைப் பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்க வருவது மிகவும் வேடிக்கையானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள நிலையிலேயே சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

தனது மனையின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் ஏறியமை உலகத்தின் கவனத்தையீர்த்தது. 

இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கேட்டிருந்தது. அதேபோல் பல மனிதநேய அமைப்புக்களும் கேட்டிருந்தன. 

ஆனாலும் அதனை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி கிளிநொச்சியில் 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையாக உள்ளது. 

உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.  அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்யக் கூடாது என்றார். 

ஆசிரியர் - Sellakumar