ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் : 600 ரன்களை கடந்தார் ஷிகர் தவான்..!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் : 600 ரன்களை கடந்தார் ஷிகர் தவான்..!
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 

இந்த ஜோடியின் அதிரடி துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38 (27) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். 

இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதன்பிறகு சந்தீப் சர்மா வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

அத்துடன், இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் சேர்த்து கே.எல்.ராகுல் (670), முதல் இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஷிகர் தவான் 600 ரன்களைக் கடந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மொத்தம் 192 ஆட்டங்களில் விளையாடி 5,878 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 

இப் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த தவான் இன்றைய ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மாவை (5,162 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு (5,182 ரன்கள்) முன்னேறியுள்ளார்.
ஆசிரியர் - Editor II