மதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..!

மதுரை வீதியில் பிச்சையெடுத்த மருத்துவ திருநங்கை : மறுவாழ்வு கிடைக்க உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர்..!
மருத்துவம் படிப்பதற்கே பலர் வழியின்றி தவித்து வரும் நிலையில், டாக்டரான பின்னர் திருநங்கை என்ற காரணத்தால் வேலை கிடைக்காமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திருநங்கை ஒருவர்.

பஸ் நிலையம் மற்றும் ரெயில்களில் திருநங்கைகள் பலர் உதவி கேட்டு கையேந்துவது உண்டு. அவர்களுக்கு பலர் உதவினாலும் சிலர் கேலி செய்வதும் நடந்துதான் வருகிறது.

ஆனால் வாழ்க்கையில் உச்சத்தை தொட்ட பலரும் திருநங்கையாக மாறியதால் கையேந்தும் நிலைக்கு சென்று இருக்கும் வேதனையான சம்பவம் பல உள்ளது.

மருத்துவம் படிக்க வழியின்றி பலர் தவித்து வரும் நிலையில் டாக்டரான பின்னர் திருநங்கை என்ற காரணத்தால் வேலை கிடைக்காமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் திருநங்கை ஒருவர்.

மதுரை ரெயில் நிலைய பகுதியில் கையேந்தி நின்ற திருநங்கை சிலரை அங்கு ரோந்து சென்ற திலகர் திடல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரித்தபோதுதான் அதில் ஒருவர் டாக்டர் என தெரியவந்தது.

இது தொடர்பாக  திலகர் திடல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கூறியதாவது..:-

"ரெயில் நிலையத்தில் சுற்றிய திருநங்கைகளை விசாரித்தபோது ஒருவர், ‘நான் டாக்டருக்கு படித்து உள்ளேன்’ என்று கூறினார். இதனை முதலில் நம்பவில்லை. அவர் சம்பந்தப்பட்ட கல்வி சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தபோது திருநங்கை கூறிய விவரங்கள் உண்மை என்பது தெரிய வந்தது.

அவரது தற்போதைய பெயர் கவி (வயது 23). தேனியை சேர்ந்த இவரது உண்மை பெயர் மகேஸ்வரன்.

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து 67 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் திருநங்கை ஆனதால் படித்த படிப்புக்கு வேலையின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை தருகிறது.

எனவே நாங்கள் திருநங்கை கவிக்கு தேவையான வெள்ளை நிற அங்கி, ஸ்டெதாஸ்கோப் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்து உள்ளோம்.

திருநங்கை கவி தனியாக கிளீனிக் நடத்த விரும்புகிறாள். எனவே அவளுக்கு சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து திருங்கையான கவி கூறியதாவது..:-

"எனக்கு தேனி சொந்த ஊர். என் இயற்பெயர் மகேஸ்வரன். நான் 12-ம் வகுப்பு படித்தபோது என் உடலில் மாற்றங்களை உணர்ந்தேன். இதனை தொடர்ந்து நான் கவி என்ற பெயருடன் திருநங்கையாக மாறினேன். மதுரை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தேன். 

இதைத்தொடர்ந்து நான் அரசாங்கத்திடம் திருநங்கை அங்கீகார சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். இதற்காக நான் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. ஆனாலும் திருங்கை அங்கீகார சான்றிதழ் கிடைக்கவே இல்லை.

மதுரையின் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் வேலை தேடி திரிந்தேன். நான் ஒரு திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக, எனக்கு வேலை மறுக்கப்பட்டது. எனவே நான் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைத்து கொண்டு இருந்தேன்.

திலகர்திடல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவின் முயற்சியால் இன்று எனக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.

எனவே நான் பொதுமக்களுக்கு குறைந்த செலவில் தரம் மிகுந்த மருத்துவம் பார்க்க விரும்புகிறேன்."

இவ்வாறு அவர் கூறினார்.

திருநங்கை கவிக்கு திருப்பரங்குன்றம் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதற்கான ஏற்பாடுகளை திலகர்திடல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கவிதா செய்து வருகிறார்.

டாக்டருக்கு படித்து இருந்தும் பிச்சை எடுத்த திருநங்கைக்கு உதவிய பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிகிறது.
ஆசிரியர் - Editor II