2-வது நாளாக டில்லியில் தொடரும் போராட்டம் : பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு..!

2-வது நாளாக டில்லியில் தொடரும் போராட்டம் : பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு..!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், 2-வது நாளாக டில்லியை நோக்கி பேரணியை தொடர்ந்தனர். 

ஹரியானாவில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள், தடைகளைத் தாண்டி, பேரணி சென்றதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 'டில்லி சலோ' என்ற பெயரில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லிக்கு பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அறிவித்தன. 

'பாரதிய கிசான் யூனியன்' என்ற பெயரில், 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து இரண்டு நாள் பேரணி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பஞ்சாபில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் நேற்று பேரணியை ஆரம்பித்தனர்.

ஷம்பு பகுதியில் ஹரியானா பொலிசார் மணலுடன் கூடிய லாரிகள் உட்பட பல்வேறு சாலை தடுப்புகளை அமைத்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை தடுப்புகளை ஆற்றில் வீசினர். லாரிகளை அகற்ற முயன்றனர். 

அப்போது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் பொலிசார் மீது கற்களையும், கம்புகளையும் வீசினர். பின், தடைகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து பேரணி தொடர்ந்தது.

இரண்டாவது நாளான இன்றும் பேரணியை தொடங்கினர். ஹரியானா - டில்லி மாநில எல்லையான சிங்கு பகுதியில் பல அடுக்கு தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தினர். 

ஆனாலும், தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிய விவசாயிகளை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்டனர். இதனால், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து செல்லுமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்தும் கலையாததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதோடு, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். 

இதனால் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
ஆசிரியர் - Editor II