பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..!

பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்..!

புரெவி சூறாவளியானது இலங்கையின் வடகிழக்கு கரையில் குச்சவெளிக்கும் திரியாயிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றிரவு ஊடறுத்து சென்று உள்ளே மையம் கொண்டுள்ளது.

இதன்காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி காரணமாக வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் ஆகிய தினங்களில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவரது செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 464 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் டீ.என்.சூரியராஜா எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவுவதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான தற்காலிக முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

புத்தளம் கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளை இன்றைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளை இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ள்ஸ் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

குறித்த இடைத்தங்கல் நிலையங்களில் 75 ஆயிரம் பேர்வரை தங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாணத்தில் பல பகுதிகளில் பலத்த காற்று வீசுவதோடு பாரியளவான சேதங்கள் எவையும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீக் கொடிப்பிலி தெரிவித்தார்.

எனினும் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதோடு வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முப்படையினருடன் இணைந்து மக்களுக்கான சேவை வழங்கப்படுகின்றது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக, அசாதாரண காலநிலை தொடர்பான அவசர தகவல்களுக்கு 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீக் கொடிப்பிலி தெரிவித்தார்

ஆசிரியர் - Editor II