வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைக்கு டுபாயிலிருந்து இலங்கை வந்த உரிமையாளர்கள்

டுபாய் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்று சுகயீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய இலங்கை பணிப்பெண் உயிரிழந்த செய்தி அறிந்து துடித்த டுபாய் நாட்டின் வீட்டுரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இலங்கைக்கு வருகை தந்து கண்ணீர் விட்டு நல்லடக்கம் செய்தமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

நீர்கொழும்பு ஜா-எல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் டுபாய் நாட்டின் வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்துள்ளார். சாந்தி பெரேரா என்ற இந்தப் பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டுப் பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. சாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, துபாய் நாட்டில் ஒரே வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். 

கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. டுபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்காது அங்கு வைத்தே சிகிச்சையளித்து வந்துள்ளனர். சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாக செய்து கொடுத்துள்ளனர்.

எவ்வளவு சிகிச்சை செய்தும் சாந்தியின் உடல் நிலை தேறாத காரணத்தினால், அவரை பராமரிக்க இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவரை வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். உடல் நிலை குணமாகாத காரணத்தில் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இலங்கைக்கு அழைத்து வந்து சாந்தியின் சகோதரரிடம் ஒப்படைத்த உரிமையாளர்கள் குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து விட்டு திரும்பிச் சென்றுள்ளனர். 

சாந்திக்கு அவரது சகோதரர் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்துள்ளார். எனினும் நாளுக்கு நாள் உடல் மோசமடைந்து வந்ததுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை வருடந்தோறும் டுபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர். 

இந்த நிலையில், அண்மையில் சாந்தி இறந்த செய்தி கிடைத்ததும் சாந்தி வளர்த்த பிள்ளைகள் மற்றும் வீட்டின் உரிமையாளர் என 6 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் சாந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியுள்ளனர். 

சாந்தியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புதைகுழிக்கு அருகில் 6 பேரும் குர் ஆனையும் ஓதியுள்ளனர். பெற்றோரை வீதியில் விட்டுச் செல்லும் பிள்ளைகள் உள்ள நாட்டில் தம்மை வளர்த்த பணிப் பெண்ணுக்கு டுபாய் நாட்டில் இருந்து வந்து மனமுறுகி இறுதி அஞ்சலியை செலுத்தியது சம்பவம் அனைவரையும் மனம் நெகிழச் செய்துள்ளது.

ஆசிரியர் - Sellakumar