அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!

அந்த வீடியோ பக்கா ஸ்கிரிப்ட்’… ‘என்ன என்னெல்லாம் பேச சொன்னாங்க தெரியுமா’… உண்மையை போட்டுடைத்த வைரல் பெண்!

சென்னையில் இளம்பெண்களிடம் ஆபாசமாகக் கேள்வி கேட்டு பேட்டி எடுத்த யூ டியூப் சேனல் தொகுப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோவில் பேசிய பெண் பல உண்மைகளைப் போட்டுடைத்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த சிலர் பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்து, அதை சேனலில் வெளியிடுவதாகச் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தனியார் யூ-டியூப் சேனல் தொகுப்பாளரான நீலாங்கரையைச் சேர்ந்த ஆசின் பத்சா, ஒளிப்பதிவாளரான பெருங்குடி அஜய்பாபு, யூ டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ”கைது செய்யப்பட்ட யூ டியூப் சேனலை சேர்ந்த நபர்கள் 3 பேரும் கடற்கரை பகுதிகளுக்குச் சென்று அங்கு வரும் இளம் பெண்களைக் குறிவைத்து கேளிக்கையாகப் பேசி வீடியோ பதிவு செய்வதோடு பெண்களை ஆபாசமாகக் காட்டும் வகையிலும் பதிவு செய்கின்றனர். பின்னர் அதில் ஆபாச வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து, அதை தங்களது யூ-டியூப் சேனனில் வெளியிட்டு வந்துள்ளனர்.

இதேபோல் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளனர். அதை 7 கோடி மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். இந்த யூ-டியூப் தளத்தை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றனர். இந்நிலையில் அந்த வீடியோவில் பேசிய பெண் தற்போது ‘Behindwoodsக்கு’ பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். ”தனக்குப் பணம் கொடுத்து தன்னை அவ்வாறு பேசச் சொன்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் என்னைத் தொடர்பு கொண்ட சென்னை டாக்ஸ் யூ-டியூப் சேனல் தொகுப்பாளரான ஆசின், உங்களுக்குக் கெட்ட வார்த்தை தெரியுமா எனக் கேட்டதாகவும், அந்த வீடியோவில் ஆபாசமாகப் பேச 1500 ரூபாய் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்னர் வெளியான பல பெண்கள் பேட்டிகளிலும் இவ்வாறே பேசச் சொன்னதாகவும் பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பல சித்தரிப்பதாகக் கூறியுள்ள அவர், தான் செய்த கின்னஸ் சாதனைகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ மூலமாகத் தான் மனதளவில் பல துன்பங்களைச் சந்தித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள அவர், தான் அந்த வீடியோவில் பேசிய நோக்கமே வேறு எனக் கதறி அழுதார்.

இறுதியாகப் பேசிய அவர், தற்போது நான் கொடுக்கும் பேட்டியில் பேசிய அனைத்தும் நான் கடந்து வந்த கடினமான பாதைகள் மூலம் கற்ற பாடங்களே தவிர, இதுவும் வேறு ஒருவர் பேசச் சொல்லிப் பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II