18.01.2021 முதல் சுவிசில் முடக்கங்கள்

18.01.2021 முதல் சுவிசில் முடக்கங்கள்
13.01.2021 கணக்கெடுப்பின்படி 3001 மகுடநுண்ணித் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 147 நோயாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதில் 58 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. பலபடி சங்கிலித்தொடர் வினை முறமையிலான (PCR) பரிசோதனையில் 15.5 வீத மக்கள் நோயுற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் எதிர்செனி (Antigen) பரிசோதனையில் 13.4 வீத மக்கள் மகுடநுண்ணித் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று  பேர்ன் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிஸ் அதிபர் திரு. கை பார்மெலின், நடுவனரச அமைச்சர்கள் திரு. அலான் பெர்சே, திரு. ஊவெலி மௌறெர், மாநில அமைச்சர் திரு. கிறிஸ்தோப் புறுற்சின், திரு. எர்ன்ஸ்ற் ஸ்ரொக்கெர் ஆகியோர் பங்கெடுத்தனர்.

சுவிற்சர்லாந்து அரசு அறிவித்துள்ள முடக்கங்கள் இவை ஆகும்:

 உணவகங்கள், பண்பாட்டு-, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் பெப்ரவரி 2021 வரை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
  • நாளாந்த வாழ்விற்கு அடிப்படைத் தேவையற்ற அனைத்து கடைகளும் மூடப்படவேண்டும்.
  • வாய்ப்புள்ள தொழிலாளர்கள் வீடுகளில் இருந்து பணிசெய்ய கடமைப்படுகின்றார்கள்
  • இடைவெளிகளைக் கணக்கில் கொள்ளாது வேலையிடத்தில் அனைவரும் முகவுறை அணியவேண்டும்.
  • தனியார் இடங்களிலும் பொதுவிடத்திலும் ஆகக்கூடியது 5வர் மட்டுமே ஒன்றுகூடலாம். குழந்தைகளும் சேர்த்து எண்ணப்படவேண்டும்.
  • பொருளாதார இன்னல் உதவித்திட்ட விதிகள் மாற்றம் செய்யப்படுகின்றது.  

 இன்னல் உதவித்திட்டம் விரிவாக்கப்படுகின்றது

 இதுவரை ஒரு நிறுவனத்தின் ஆண்டுவருமானத்தில் 20 விகிதம் வரை கடனுதவியாக அரசுவழங்க முன்வந்திருந்து. ஒரு நிறுவனம் பெறக்கூடிய உதவியாக உச்சவரம்பு 500 000 பிராங்குகள் என முன்னர் சுவிஸ் அரசு தீர்மானித்திருந்தது. புதிதாக இத் தொகையின் வரம்பெல்லையை 750 000 பிராங்குகளாக சுவிஸ் அரசு உயர்த்தி உள்ளது. தற்போதைய சூழலால் பூட்டப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இலகுவான முறையில் இதற்கு விண்ணப்பிக்கலாம். பங்கு நிறுவனங்கள் இலாபம் அளிப்பதில் 3 ஆண்டுகளுக்கு தடையினைக் குறுக்கி உள்ளது.
 
சுவிஸ் அதிபர் உரை

 தொற்றின் வேகத்தை அதிகப்படுத்தி உள்ள உருமாறிய மகுடநுண்ணித் தொற்றின் பாதிப்பு எம்மை இம் முடக்கங்களை அறிவிக்க தூண்டி உள்ளது என்றார் சுவிஸ் அதிபர் திரு. பார்மெலின்.

 நாம் ஒன்றிணைந்தே ஒரு பொது இணக்க முடிவிற்கு வரவேண்டி இருந்தது. மக்கள் தமது கருத்தினை எழுத்தில் பல கடிதங்கள் ஊடாக அளித்திருந்தனர். எங்கள் கருத்துக்கள் வேறுபட்டவையாகவும் இருந்தது. இப்போதைய எமது அறிவிப்பு பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது எமக்குத் தெரியும். 

ஆனால் நாம் முரண்பாடுகளை வளரத்;துக்கொள்வது மகுடநுண்ணிக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும். ஆகவே நாம் அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கையினையும் முழுமையாக கைக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் அனைவரும் இவ்வழியில் ஒன்றிணைந்தே பயணிக்க வேண்டும். ஒன்றிணைந்தே இதனை நாம் ஒரு சுவிஸ் நாடாக அடையமுடியும்.

 நாம் தற்போது எதிர்கொள்ளும் சூழல் எமக்கு வலியைத் தருகின்றது, ஆகவே அது கோபத்தை உண்டுபண்ணுகின்றது. ஆனாலும் நாம் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போதைய சூழலில் மெதுவாக நாம் நல்வழியை அடைந்து வருகின்றோம் என்றார் சுவிஸ் அதிபர்.
 
சுகாதார அமைச்சர்

 இன்று தொற்றின் தொகை 3000தை அடைந்துள்ளது. தொற்றுப்பெருக்கத் தொகை ஒப்பீட்டு விகிதம் 1ஐத் தாண்டி விட்டது. இப்போது நெருக்குதலாக அமைந்திருப்பது உருமாறிய மகுடநுண்ணி ஆகும். புதிய உருமாறிய நுண்ணியின் தொற்று 50 – 70 வீதம் அதிகரித்துள்ளது என்றார் சுகாதார அமைச்சர். தற்போதைய சுவிசின் நிலை பிரித்தானிய கடந்த கிழமையில் இருந்ததுபோல் உள்ளது. ஆனால் எமக்கு இது தொடர்பில் பட்டறிவு உண்டு.

 நாம் எதிர் வரும் நாட்களில் அதிக தொற்றுக்களை பதிவுசெய்ய வேண்டி வரலாம். இது கேடான செய்தியாக இருப்பினும் 3வது அலைக்கு எம்மைத் தயார்செய்ய கால எல்லை கிடைத்துள்ளது. முன்னரைப்போல் இப்போதும் மருத்துவனைகளின் பழுவைக் குறைப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார் சுகாதார அமைச்சர்.
 
உதவித் தொகை செலுத்த காலம் எடுக்கும்

 இன்னல் உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருப்போருக்கு உரிய உதவி கிடைப்பதற்கு காலம் எடுக்கும். பணத்தை ஒதுக்குவது அல்ல கடினம். அதனை முகாமைப்படுத்தி உரிய செயல்முறை ஏற்பாட்டியலிற்கே காலம் எடுக்கும் என்றார் நிதி அமைச்சர் திரு. மௌறெர்.

 விண்ணப்ப ஏற்பாட்டியலில் சில தளர்வுகளை ஆற்ற நாம் எண்ணுகின்றோம். 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் போதாதென நினைக்கின்றோம். புதிய கடன் தொடர்பில் மார்ச் 2021ல் முடிவெடுப்போம்.

 பூட்டப்பட்டிருக்கும் நிறுவனங்கள்  இடர்நிலையில் சேர்த்துக்கொள்ளப்படும்

 இப்போது 40 நாட்களுக்கு மேலாகப் பூட்டப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இடர்நிலை வரையறைக்குள் தானாக சேர்த்துக்கொள்ளப்படுவர். உடற்பயிற்சி நிலையம், உணவகங்கள், மற்றும் இதுபோன்ற நிறுவனங்கள் இந் நிரலில் சேர்க்கப்படும். இவர்கள் இலகுவான முறையில் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.
  
பொருளாதாரத்தை வலிமைப்படுத்த உதவிகள் விரிவாக்கப்படும்

 தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லை. நாம் தற்போது வழமையான பொதுச்சட்டத்திற்குகீழ் இயங்குகின்றோம். ஆகவே அடுத்த சில நாட்களுக்குள் உதவிகள் சென்றடையாது. உரிய சட்ட முறைகள் கடைப்பிடிக்கப்பட்டே உதவிகள் சென்றடையும். நாம் மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம் என்றார் நிதி அமைச்சர் திரு. மௌறெர்.
 
பூக்கள் அடிப்படைத் தேவையா?

 அடிப்படைத் தேவைக்கு உரிய கடைகள் மட்டும் திறந்திருக்கலாம் எனும் விதியில் பூக்கடைக்கு ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு சுகாதாரத்துறை அதிகாரி திரு. மைக் சுப்பாக் இவ்வாறு பதிலளித்தார்: பூக்கடைகள் மட்டுமல்ல, இரும்பு, கட்டடத்தளவாடக் கடை மற்றும் பூச்சந்தை, பூக்கடை என்பன திறந்திருக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளாந்த வாழ்விற்கு பூக்களும் தேவை என்ற அடிப்படையிலும் கடந்த ஓராண்டிற்று முன்னர் வசந்தகாலத்தில் விலக்கு நிரல் தாயாரிக்கப்பட்டபோது பூவும் இணைக்கப்பட்டது.
 
ஏன் பனிச்சறுக்கு திடல் திறந்திருக்கலாம்?

 பனிச்சறுக்குத் திடலில் உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளன, அங்கு கடைகள் திறந்திருக்கவில்லை. பனிச்சறுக்கு விளையாட்டு வெளித் திடலில் நடைபெறுவதால் அங்கு இடை வெளி பேணத்தேவையில்லை என்றார் சுகாதார அமைச்சர்.
 
முடக்கத்திற்கு திங்கள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

 நாம் திட்டமிட்டு இந் நடவடிக்கைகளை மேற்கொள்ள கால எல்லை தேவையாக உள்ளது. மேலும் நாம் வெடிப்பு நிகழ்வு எதற்கும் நடுவில் இல்லை. ஆகவே எமது நிரலிற்கு ஏற்ப நாம் செயற்படலாம் என்றார் திரு. பெர்சே.
 
பாடசாலைகள் பூட்டப்படுமா?

 மாநிலங்களின் இறையாண்மைக்குள் பாடசாலைகள் பூட்டுவது தொடர்பான முடிவகள் உள்ளது. இதுவரை நடுவனரசிற்கு அதுதொடர்பில் மாநிலங்களிடமிருந்து செய்தி வரவில்லை. தற்போதையள உருமாறிய மகுடநுண்ணியின் தொற்றுப்பரவல் வேகத்தில் பாடசாலைகள் பூட்டுவது தொடர்பான முடிவு பற்றியும் நாமும் சிந்திக்க வேண்டும், ஆனாலும் இது தொடர்பான இறுதி முடிவெடுக்க வேண்டியது மாநிலங்கள் ஆகும் என்றார் திரு. பெர்சே.
 
வீடுகளில் இருந்தபடி பணி?

 முடிந்தளவு பணிகளை வீடுகளில் இருந்து ஆற்றுவதற்கு நிறுவனங்கள் முயலவேண்டும். மிகு உயர் நிறுவனங்கள் உரிய தொழில்நுட்ப பொருட்கள் இல்லாது வீடுகளில் இருந்து பணி ஆற்றமுடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால்  முகாமைத்துவப் பணிகள் வீடுகளில் இருந்து ஆற்ற முடியும் என்றார் பொருளாதார அரசியல் நிலைய இயக்குனர் திரு. ஏரிக் சினைடெர்.
 
5வர் மட்டும் ஒன்றுகூடலாம்

 இவ் விதிக்கமைய குடும்பத்தில் 5வர் அமைந்தவர்கள் எவரையும் நேரில் அழைக்க முடியாது. இது குடும்ப உறவுகளைப் பாதிக்காதா என வினாவப்பட்டபோது, இதற்கு சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: எனக்கும் 3பிள்ளைகள் உள்ளனர் இந்த விதி என்னை முடக்குகின்றது. ஆனால் இருவீட்டார் ஒன்றுகூடத்தடை என்பதை விலத்தி 5வர் மட்டும் ஒன்றுகூடலாம் என முடக்கத்திலும் தளர்வினை அளித்துள்ளோம். முடிந்தளவு தொடர்புகளை குறைத்துகொள்ள வேண்டும். இவ்வாறே நோய்த்தொற்றினைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றார் சுகாதார அமைச்சர்.
 
எப்போது தளர்வு

 இன்று நாம் 3வது அலையைத் தடுப்பதற்கு முன்னேற்பாடுகளைச் செய்கின்றோம். புதிய வகை உருமாறிய மகுடநுண்ணியின் போக்கினை நாம் கணிக்க முடியாது உள்ளது. அடுத்த கிழமைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க வேண்டி உள்ளது. எமது நோக்கம் கடுமையான விதிகளை முடிந்தளவு வேகமாக நீக்குவதாகும் என்றார் சுகாதார அமைச்சர் திரு. பெர்சே.
 
ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை

 நாம் தற்போது மனிதர்களுக்கு வலிக்கும் நோக்கள் பற்றிப் பேசிக்கொண்டுள்ளோம். ஆனால் தற்போது சுவிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு செலவு செய்யப்படும் நிதித்தொகை சீராக அடுத்த 15 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம் என்றார் நிதி அமைச்சர் திரு. மௌறெர்.
 
வரியை ஏற்றாது கடன் பெற முடியுமா?

 2020ல் ஏற்பட்ட அதே கடன்சுமை 2021லும் இருக்கும் என்றார் நிதியமைச்சர். பணத்தை ஒருமுறைதான் செலவுசெய்யலாம். 2021ல் எமது கடன்சுமைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் 30 பில்லியன் புதிய கடனும் சேர்ந்து கொள்கின்றது. இவை அனைத்தும் ஏதாவது ஒரு நாள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றார் நிதி அமைச்சர்.

 எமது அண்டை நாடானா இத்தாலி நாட்டின் கடன் பொருளாதார அரசியலை நாம் அறிவுவோம். அவ்வழியில் நாம் செல்லமாட்டோம் என நம்புகின்றேன். நிதியைக் கையாள்வது தொடர்பில் எமக்கு தன் ஒழுக்கம் வேண்டும். ஒவ்வொருவரும் மில்லியன் ஒதுக்குக என கோரிக்கை விடும்போது கவலை அளிக்கின்றது. ஆனாலும் எமது கடன்களை வரியை உயர்த்தாது செலுத்தி முடிக்கும் வழியில் நாம் பயணிக்கின்றோம் என்றார் நிதி அமைச்சர்.
 
ஆசிரியர் - Editor II