வெளிவரும் அதிர்ச்சி தகவல் -இலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா

வெளிவரும் அதிர்ச்சி தகவல் -இலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா

இலங்கையில் கொவிட் தொற்றின் 2ஆவது அலை பரவ ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சுமார் 100 வைத்தியர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் உறுப்பினர் ஹரித்த அளுத்கே இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சுமார் 40 வைத்தியர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்று வருவதாக அவர் கூறுகின்றார்.

வைத்தியர்கள் மாத்திரமின்றி, தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவினர் பலர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வைத்தியர்களுடன் நெருங்கி பழகிய 200 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் -19 இன் இரண்டாவது அலை இலங்கையில் 2020 ஒக்டோபரில் பதிவாகியுள்ளது, இதைத் தொடர்ந்து நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை சுகாதாரத் துறையில் பாதிப்பு ஏற்பட்டால், கொரோனா வைரஸ் தொற்றுநோயை இலங்கையால் தோற்கடிக்க முடியாது என்று டாக்டர் ஷெனல் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாவது அலையின் போது அதிகமான மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது அதிகமாக இருந்தால், மற்றொரு கொத்தணி உருவாவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்., ஏனெனில் அவர்கள் பலருடன் பழகுதால் இந்த நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர் - Editor II