ஈரான் அதிபரின் சுவிஸ் பயணத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கிய கைது

ஈரான் அதிபரின் சுவிஸ் பயணத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கிய கைது

ஈரான் அதிபரான Hassan Rouhani சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளது ஒரு வித அசௌகரியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியாவிலுள்ள ஈரான் தூதரகத்துடன் தொடர்புடைய தூதரக அதிகாரி ஒருவர், பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஆயிரக்கணக்கான ஈரான் எதிர்ப்பு ஆதரவாளர்கள் பங்கேற்ற பேரணி ஒன்றில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக ஜேர்மனியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈரானிய அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதையடுத்து அது இன்னும் நீடிக்கிறதா என்பது குறித்த சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தை உறுதி செய்து கொள்வதற்காக ஈரான் அதிபர் ஐரோப்பிய சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் ஈரான் தூதரின் கைது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகம் அந்த தூதரின் தூதரக சிறப்பு பாதுகாப்புகளை விலக்கிக் கொள்ளும்படி கோருவதற்காக ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளரான Matthias Forenbacher கூறும்போது, பெயர் வெளியிடப்படாத அந்த தூதரக அதிகாரிக்கு எதிராக ஐரோப்பிய கைது வாரண்ட் பிறபிக்கப்பட்டுள்ளபடியால் அவர் 48 மணி நேரத்திற்குள்ளாக அவரது தூதரக பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறினார்.

ஆனால் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சரோ, இது ஈரான் அதிபரின் வருகையை முக்கியத்துவமற்றதாக ஆக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு போலி நடவடிக்கை என்று கூறி அதை நிராகரித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II