தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்!

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், சட்டசபையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் இவ்வாண்டின் முதல் கூட்டம் கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய இந்திய மதிப்பில் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைக் காலத்தை உயர்த்தும் சட்டவரைபும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்டவரைபும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதல்வர் தாக்கல் செய்வதுடன், அவர் தாக்கல் செய்யும் 10ஆவது வரவு செலவுத் திட்டமாக இது காணப்படுகிறது.

இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடர் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு நடைபெறும் எனவும் அன்றைய நாட்களில் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II