விலகி சென்ற தோழி.. ஆத்திரத்தில் மாணவன் செய்த கொடூர செயல்; ஆந்திரா முதல்வரின் அதிரடி உத்தரவு!

விலகி சென்ற தோழி.. ஆத்திரத்தில் மாணவன் செய்த கொடூர செயல்; ஆந்திரா முதல்வரின் அதிரடி உத்தரவு!

விலகி சென்ற கல்லூரி மாணவியின் கழுத்தை நெரித்து மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் அனுஷா(19) என்கிற இளம் பெண். இவர் அங்குள்ள நரசராவ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

அவருடன் விஷ்ணு வர்தன் என்ற இளைஞனும் படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக அனுஷா, தனது சக நண்பான விஷ்ணுவின் நட்பில் இருந்து விலகியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த நாளுக்கு கல்லூரி முடிந்த உடன் விஷ்ணு, இளம் பெண் அனுஷாவை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, போகும் வழியில் ஏன் என்னை விட்டு விலகிச் செல்கின்றாய்? என்று, விஷ்ணு கேட்டு உள்ளார். இதனால், அனுஷாவுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இதில் கடும் ஆத்திரமடைந்த விஷ்ணு, இளம் பெண் அனுஷாவின் கழுத்தை நெரித்து உள்ளார்.

இதில், அனுஷா பரிதாபமாக அங்கேயே உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் குறித்து வெளியே தெரியாமல் இருப்பதற்காக, அனுஷாவின் உடலை அங்குள்ள கழிவு நீர் ஓடையில் வீசி உள்ளார்.

அதன் பின்னர், அவர் என்ன நினைத்தாரோ, அங்கிருந்து நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, அங்குள்ள போலீசாரிடம் அவர் சரணடைந்து உள்ளார்.

இளைஞர் விஷ்ணு சரணடைந்த பிறகே இளம் பெண் அனுஷா படுகொலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்த கொலை குற்றம் குறித்து, அந்த மாநிலத்தின் ஊடகத்தில் தகவல் வெளியான நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த சக கல்லூரி மாணவர்கள், கொலைக் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உயிரிழந்த அனுஷாவின் உடலை துாக்கிக் கொண்டு சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும், இந்த போராட்டம் அன்றைய தினம் நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால், மாணவர்களின் போராட்டம் காரணமாக, உயிரிழந்த கல்லூரி மாணவி அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும்,

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு அரசு சார்பில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஓய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதே போல், கொலை குற்றவாளி மீது விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான தண்டனையும் பெற்றுத் தரப்படும் என்றும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதன் படியே, போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் - Editor II