ஐ.நாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் இலங்கை! – ஹக்கீம் சுட்டிக்காட்டு

ஐ.நாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் இலங்கை! – ஹக்கீம் சுட்டிக்காட்டு

மனித உரிமை தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் சபையுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்துச் செயற்படுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். என்று ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்தை அனுமதிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தனிப்பட்ட நாடுகளில் மனித உரிமைகளைக் கடைபிடிப்பது தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையை, ஒருபோதும் குறைத்து மதிப்பிடப்படக்கூடாது.

ஜனாஸா விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் இலங்கை மீதான பிரேரணையைக் கொண்டுவரும் பிரதான நாடுகளின் அறிக்கை ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டதே. இது இந்த விடயத்தில் தீர்வு கிடைப்பதற்கு வழிவகுத்தது.

இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமைக்குக் குரல் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.

ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களிலும் இலங்கை அரசு ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் – என்றார்.

ஆசிரியர் - Editor II