டாடா நானோ உற்பத்தி நிறுத்தம்

டாடா நானோ உற்பத்தி நிறுத்தம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

டாடா நானோ உற்பத்தி நிறுத்தம்இந்தியாவில் டாடா நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தியாவின் விலை குறைந்த கார் என்ற வகையில் பல்வேறு பொறியியல் சவால்கள் மற்றும் சிக்கனமான உற்பத்தி யுக்திகளை கையாண்டு நானோ காரினை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது.

குறைந்தளவு விற்பனை காரணமாக நானோ ஹேட்ச்பேக் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 275 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூனில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

டாடா குழுமம் நிறுவனத்துடன் நானோ காரின் உறவு நெருக்கமானது என்பதால் தொடர்ந்து நானோ கார் உற்பத்தி செய்யப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் நானோ கார் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. டாடா நானோ இந்தியா மட்டுமின்றி உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது."டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர்களின் புதுவித மற்றும் வித்தியாச உணர்வின் வெளிப்பாட்டு சின்னமாக நானோ கார் இருக்கும். கார் மாடல்களின் கால அளவு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு, விதிமுறைகள் மற்றும் போட்டி உள்ளிட்டவற்றை பொருத்து மாறும். இதுபோன்ற அறிவிப்புகள் அதற்கான முடிவுகளை எடுக்கும் போதே அறிவிக்கப்படும்." என டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நானோ கார் மாடலை வைத்து வேறு திட்டங்கள், அதாவது எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்குவது குறித்து திட்டமிடப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. எனினும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதுவரை நானோ கார் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும் நானோ காரினை முன்பதிவு அடிப்படையில் குஜராத்தில் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்வதாக டாடா மோட்டார்ஸ் அறவித்துள்ளது.
ஆசிரியர் - Editor II