அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ‘திடீர்’ டெல்லி பயணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ‘திடீர்’ டெல்லி பயணம்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

மோடியை சந்தித்து பேசிய பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமித்ஷாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் இரு தரப்பினரும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போது அ.தி.மு.க. 66 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. புதிய வலுவை பெற்று இருக்கிறது.

ஆனால் திடீரென அ.தி.மு.க.வை கைப்பற்ற எம்.ஜி.ஆரின் தோழி சசிகலா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களிடம் அவர் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் தேவையில்லாத சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி அரசியல் தொடர்புடன் ஓ.பன்னீர்செல்வம் காய்களை நகர்த்துவதாக தெரிகிறது.

அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது நடவடிக்கைகள் அ.தி.மு.க.வை கட்டுப்படுத்தாது என்று தொடரப்பட்ட வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாகவும் டெல்லியில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில் சசிகலாவை ஓரம் கட்ட தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த வியூகம் பற்றியும் பேசப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த முறை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தின்போது அ.தி.மு.க.வுக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மட்டும் மத்திய மந்திரி பதவி கிடைத்தது.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திர நாத்துக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு ஒவ்வொரு முறையும் கிடைக்காமல் நழுவி கொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வது அது தொடர்பாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கும் நேரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆனாலும் பிரதமர் மோடி அழைப்பின் பேரில்தான் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிரதமர் மோடியை நாளை (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் - Editor II