பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

சசிகலாவின் உதவி இல்லாமலேயே அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்ற நினைப்பதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்க்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து வழிநடத்தி வருகிறார்கள்

பொதுச்செயலாளர் பதவி அகற்றப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 66 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க.வை மீண்டும் கைப்பற்றப் போவதாக சசிகலா பேசி வருவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

இதுதவிர அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை அ.தி.மு.க.வுக்கு கடும் சவாலாக எழுந்துள்ளன. இந்த பிரச்சனைகளை கையாள்வதில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதுபோல அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவு கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

டெல்லியில் நேற்று இரவு அவர்கள் இருவரும் தமிழக அரசு இல்லத்தில் தங்கினார்கள்.

டெல்லியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அந்த பங்களாவில் குடியேறுவதற்காக இன்று காலை 9 மணிக்கு ரவீந்திரநாத் எம்.பி. பால்காய்ச்சும் விழா நடத்தினார்.

இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 30 நிமிடங்கள் அ.தி.மு.க. தலைவர்கள் அங்கிருந்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
ஆசிரியர் - Editor II