அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

நேரில் வந்து தேர்வுகளை எழுதுவதால் கொரானோ தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமுள்ளது என்று மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

கொரானோ தொற்றால் திருவனந்தபுரம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிடெக் மாணவர்களுக்கு நடக்க இருந்த முதல் மற்றும் மூன்றாவது செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும்படி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெறாமல் இருக்கும் பல்கலைகழகத் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தவேண்டும் என்று எட்டு மாணவர்கள் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 
அந்த மனுவில் ஜூலை 9ல் நடைபெற்ற முதல் மற்றும் மூன்றாவது  செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை வேண்டுமானால் வழக்கமான எழுத்துத் தேர்வாகவும் பிற தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும் நடத்தவேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
மாறாக எட்டாவது செமஸ்டர் தேர்வை ஆன்லைனிலும், முதலாவது மற்றும் மூன்றாவது செமஸ்டர் தேர்வுகளை நேரில் வந்து எழுதுமாறு கூறுவது மாணவர்களின் நலனில் அக்கறையின்றி சட்டத்திற்கு முன்பாக மாணவர்களை சமமற்ற பார்வையில் பார்ப்பதாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ஐம்பது சதவீத பொது போக்குவரத்திற்கு மட்டும் அனுமதியுள்ள நிலையில் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதில் சுகாதார சிக்கல்கள் உள்ளது. நேரில் வந்து தேர்வுகளை எழுதுவதால் கொரானோ தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடபட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதி ராவல், முதல் மற்றும் மூன்றாவது செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன், எஞ்சியுள்ள தேர்வுகளை பல்கலைக்கழகம்  ஆன்லைன் வழியாக நடத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


ஆசிரியர் - Editor II